ஆளுங்கட்சி கவுன்சிலர் மனு கொடுத்தும் 3 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத பூங்கா
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் தெய்வசிகாமணி நகரில், ஆளுங்கட்சி கவுன்சிலர் மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து மனு கொடுத்தும், மாநகராட்சி பூங்கா சீரமைக்கப்படாமல் உள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சி, 34வது வார்டு தெய்வசிகாமணி நகரில், 2015ம் ஆண்டு, 24 லட்சம் ரூபாய் செலவில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பூங்கா அமைக்கப்பட்டது. இதில் சிறுவர்களுக்கான பல்வேறு விளையாட்டு உபகரணங்கள், செயற்கை நீரூற்று, அழகிய புல்தரை, வண்ணமயமான மலர் செடிகள், இரவில் ஒளிரும் மின்விளக்கு, நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை, அமர்வதற்கான இருக்கை என, பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. இப்பூங்காவை, தெய்வசிகாமணி நகர், எம்.எம்.அவென்யூ, ராதாகிருஷ்ணன் நகர் உள்ளிட்ட பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். முறையான பராமரிப்பு இல்லாததால் விளையாட்டு உபகரணங்கள், செயற்கை நீரூற்று, மின்விளக்குகளும் பழுதடைந்து, வளாகம் முழுதும் செடி, கொடிகள் வளர்ந்துள்ளதால், பூங்காவை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால், லட்சக்கணக்கான ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பூங்கா பயன்பாடின்றி வீணாகி வருகிறது. எனவே, தெய்வசிகாமணி நகரில் செடி, கொடிகள் வளர்ந்து, விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்த நிலையில் உள்ள பூங்காவை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து 34வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் பிரவீன்குமார் கூறியதாவது: தெய்வசிகாமணி நகர் பூங்காவை சீரமைக்க வேண்டும் என, மாநகராட்சி நிர்வாகத்திடம், மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து மனு கொடுத்து வருகிறேன். ஆனால், பூங்கா சீரமைப்பது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.