வேருடன் சாய்ந்த மரம் அகற்றம் உயிர் தப்பினார் தக்காளி வியாபாரி
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் அருகில் உள்ள எஸ்.வி.என்., தெரு சாலையோரம், 20 ஆண்டு பழமையான வாகை மரம் ஒன்று உள்ளது. நேற்று காலை 11:15 மணியளவில், காஞ்சிபுரத்தில் பலத்த மழை பெய்தபோது, இம்மரம் வேருடன் சாலையில் விழுந்தது.இதில், சாலையில் தக்காளி வியாபாரம் செய்து கொண்டிருந்த மூன்று சக்கர வாகனத்தின் மீது விழுந்ததில் வாகனம் சேதமடைந்தது. நல்ல வேளையாக வியாபாரிக்கு காயம் ஏற்படவில்லை. சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால், அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது.இதுகுறித்து தகவல் அறிந்த காஞ்சிபுரம் மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் சங்கர் தலைமையிலான, தீயணைப்பு மற்றும் மீட்புபணி வீரர்கள் சென்று, 30 நிமிடம் போராடி, மரம் அறுக்கும் இயந்திரம் வாயிலாக, வேருடன் சாய்ந்து கிடந்த மரத்தை அகற்றினர்.இதற்கிடையே, மாநகராட்சி கமிஷனர் நவேந்திரன் அப்பகுதியை பார்வையிட்டார். மரம் விழுந்து வண்டி நசுங்கியதால், வாழ்வாதாரம் பாதித்த தக்காளி வியாபாரிக்கு, அப்பகுதி கவுன்சிலர் சாந்தி, 5,000 ரூபாய் சொந்த பணத்தை வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.