மர்ம நபர்கள் தீ வைப்பால் கருகி கிடக்கும் மரக்கன்றுகள்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - அரக்கோணம் - திருத்தணி வரையில், 41 கி.மீ., இருவழிச் சாலை உள்ளது. இந்த சாலை, சென்னை - கன்னியாகுமரி தொழில்வழித்தட திட்டத்தில், நான்குவழிச் சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.காஞ்சிபுரம் - தக்கோலம் கூட்டுச்சாலை வரையில், சாலை விரிவுபடுத்தும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மேலும், தார் சாலையோரம், 10,500 ஆலன், பூவரசன், புங்கன் உள்ளிட்ட பலவிதமான மரங்களை நட்டு பராமரித்து வருகின்றனர்.இதில், விஷகண்டிகுப்பம் ஏரிக்கரையோரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் ஏரியில் வறண்டு கிடக்கும் புல்லுக்கு தீ வைத்துள்ளனர்.இந்த தீயால், சாலையோரம் வளர்ந்திருக்கும் மரக்கன்றுகள் தீயில் கருகி நாசமாகி உள்ளன.எனவே, தீயில் கருகிய செடிகளுக்கு பதிலாக மாற்று செடிகளை நடவு செய்ய வேண்டும் என, பசுமை ஆர்வலர்கள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.