உள்ளாவூர் மடுவேரி நிரம்பி 1,000 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
வாலாஜாபாத்: உள்ளாவூர் மடுவேரி முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து, 1,000 கன அடி உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது. வாலாஜாபாத் ஒன்றியம், உள்ளாவூரில் 180 ஏக்கரில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. 7 அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில், 14,000 மில்லியன் கன அடி நீர் சேமிக்க உள்ளது. ஏரி முழுமையாக நிரம்பினால் அத்தண்ணீரைக் கொண்டு அப்பகுதியில் உள்ள 620 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசனம் பெறும். பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பழையசீவரம் தடுப்பணை நிரம்பி அங்கிருந்து மடுவேரிக்கு கால்வாய் வாயிலாக தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில், இரு தினங்களாக பெய்த கனமழை காரணமாக ஏரிக்கான நீர்வரத்து அதிகரித்து நேற்று காலை ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து, ஏரி கலங்கல் வழியாக, தொடர்ந்து 1,000 கன அடி நீர், உபரியாக வெளியேறுவதால் உள்ளாவூர் பெரிய ஏரி, பாலுார் ஆகிய ஏரிகளுக்கான நீர்வரத்தும் துவங்கி உள்ளது. இதனால், உள்ளாவூர் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.