உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மழை கொட்டித்தீர்த்தும் நீரை சேமிக்க முடியாததால்... திடீர் ஞானோதயம்!:  பாலாறு தடுப்பணையை துார் வார மண் அள்ள முடிவு

மழை கொட்டித்தீர்த்தும் நீரை சேமிக்க முடியாததால்... திடீர் ஞானோதயம்!:  பாலாறு தடுப்பணையை துார் வார மண் அள்ள முடிவு

காஞ்சிபுரம்: வடகிழக்கு பருவமழை துவக்கத்திலேயே கொட்டித் தீர்த்தாலும், தடுப்பணை முழுதும் மணல் சூழ்ந்து நீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டதை காலம் கடந்து உணர்ந்த நீர்வளத்துறை அதிகாரிகள், தற்போது பாலாறு தடுப்பணையை துார் வாரி, 3,000 டன் மண்ணை அகற்ற முடிவு செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த திருமுக்கூடல் அருகே, பாலாறு, செய்யாறு, வேகவதி ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிக்கின்றன.

இந்த பகுதியில் உள்ள திருமுக்கூடல், பழையசீவரம், புல்லம்பாக்கம், பினாயூர், உள்ளாவூர் போன்ற சுற்றுவட்டார கிராமங்கள், குடிநீர் மற்றும் வேளாண் பணிகளுக்கு பாலாற்றை நம்பியுள்ளன. இந்த கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, 2020ல், பழையசீவரம்- பழவேரி பாலாற்றின் குறுக்கே, நபார்டு திட்டத்தின் கீழ், 42 கோடி ரூபாய் செலவில், நீர்வளத்துறை சார்பில் புதிய தடுப்பணை கட்டப்பட்டது. இதன் வாயிலாக இந்த தடுப்பணையில் தண்ணீர் நிரம்பினால் பினாயூர், அரும்புலியூர், உள்ளாவூர், பாலுார் உள்ளிட்ட ஏரிகளுக்கு தண்ணீர் செல்ல வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ஏரியை நம்பியுள்ள 2,000 ஏக்கருக்கும் அதிகமான விளை நிலங்கள் பயன் பெறுகின்றன. வெள்ளப்பெருக்கு பழையசீவரத்தில் தடுப்பணை கட்டியதை தொடர்ந்து, 2021, 2022ம் ஆண்டுகளில், பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, தடுப்பணை நிரம்பியது. கிட்டத்தட்ட, 1 டி.எம்.சி., தண்ணீர் பாலாற்றில் தடுப்பணையால் தேங்கி நின்றது. இது ஒருபுறம் இருக்க, தண்ணீரோடு மணல் அடித்து வந்து, தடுப்பணையின் பள்ளமான ஆழ பகுதிகள் மூடப்பட்டு, 6 அடி உயரம் கொண்ட அணை உயரத்திற்கு மணல் சேர்ந்து, 1 அடி உயரமாக குறுகிவிட்டது. கடந்த 2023ம் ஆண்டிலேயே தடுப்பணை முழுதும் மணல் நிரம்பி இருந்தது. பருவமழை காலம் மட்டுமின்றி, கோடை மழை, தென்மேற்கு பருவமழை காலங்களில், ஓரளவு மழை பெய்தாலே அணை விரைவாக நிரம்பி விடுகிறது. Galleryஇதனால், இப்பகுதியில் தடுப்பணை இருந்தும், பாலாற்றின் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர வழியின்றி, விவசாயத்திற்கு பயன் அளிக்கவில்லை என, விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். தடுப்பணையில் சேர்ந்துள்ள மணலை அகற்ற, விவசாயிகள் இரண்டு ஆண்டுகளாக, நீர்வளத்துறையிடம் கேட்டு வருகின்றனர். ஆனால், பிரச்னையின் தீவிரம் உணராத நீர்வளத்துறை, இதற்கான நடவடிக்கையை இதுவரை தீவிரமாக எடுக்கவில்லை. மணலை அகற்றுவதற்கு, 3.3 கோடி ரூபாய் கேட்டு, அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பியுள்ளது. ஆனால், இதுவரை மணலை அகற்றுவதற்கான நிதியும் தமிழக அரசு ஒதுக்கவில்லை. வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ள நிலையில், பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பழைய சீவரம் தடுப்பணையிலிருந்து, தண்ணீர் கடலை நோக்கி சென்றது. ஆனால், தடுப்பணை நிரம்பவில்லை. பருவமழை துவங்கும் முன், மணலை அகற்றி இருந்தால், தடுப்பணையில் தண்ணீரை தேக்கியிருக்க முடியும்; அதை செய்ய நீர்வளத்துறை அதிகாரிகள் தவறிவிட்டனர் என, விவசாயிகள் குற்றம் சாட்டினர். அவசர பணி நிலைமை சிக்கலானதால், திடீர் ஞானோதயம் நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு வந்துள்ளது. தடுப்பணையில் உள்ள மணலை அகற்ற முடிவு செய்துள்ளனர். அவசர பணியாக மேற்கொள்ளவும், அகற்றப்படும் மண்ணை விற்பனை செய்யவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: நீர்வளத்துறையிலேயே கனிம பிரிவு ஒன்று உள்ளது. அந்த பிரிவு தான், மணலை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தடுப்பணையில் இருந்து மணலை அகற்றி, ஆன்லைன் வாயிலாக முறைப்படுத்தி, விற்கவும் அவர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோப்புகள் அரசின் பார்வைக்கு சென்றுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து, விவசாயிகள் கூறுகையில், 'நீர்வளத்துறை அதிகாரிகள் காலம் கடந்து, பாலாறு தடுப்பணை மண்ணை அகற்ற முடிவு செய்துள்ளனர். இந்த பணியை ஒப்புக்கு மேற்கொள்ளாமல், முறையாக மண் அகற்றி, அதிக நீர் தேக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ