உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நகர்ப்புற அரசு மருத்துவமனைகளில் உட்கட்டமைப்பு வசதியின்றி...தவிப்பு!:குடிநீர், ஜெனரேட்டர், இருக்கை, சுற்றுச்சுவர் கூட இல்லாத அவலம்

நகர்ப்புற அரசு மருத்துவமனைகளில் உட்கட்டமைப்பு வசதியின்றி...தவிப்பு!:குடிநீர், ஜெனரேட்டர், இருக்கை, சுற்றுச்சுவர் கூட இல்லாத அவலம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில் செயல்படும், ஐந்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் ஐந்து நகர்நல வாழ்வு மையங்களில் குடிநீர், ஜெனரேட்டர், சுற்றுச்சுவர், இருக்கை, மருத்துவர்கள் இல்லாதது உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகள் தொடர்வதால், நோயாளிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கின்றனர். மாநகராட்சியில் வசிப்போரின் ஆரோக்கியம் காக்க, மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை சரிசெய்ய வேண்டும் என, நோயாளிகள் எதிர்பார்க்கின்றனர்.காஞ்சிபுரம் மாநகராட்சியில், 2.50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். நகரில் வசிப்போரின் சுகாதாரம் காக்கவும், நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், மாநகராட்சி சார்பில் மருத்துவ உட்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்.ஆனால், நிதி பற்றாக்குறை, ஆள்பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால், மருத்துவ வசதிகளை மேம்படுத்த முடியாத நிலை தொடர்கிறது. அரசின் தாமதம் காரணமாகவும், மருத்துவ வசதிகளை விரைந்து பெறுவதில், நகர்ப்புற வாசிகள் சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்.காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள ஐந்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்கி வருகின்றன. இதுமட்டுமல்லாமல், தலா 25 லட்சம் ரூபாய் மதிப்பில், ஐந்து நகர்நல வாழ்வு மையங்கள் கட்டப்பட்டு, கடந்த 2023ல் திறக்கப்பட்டன.இந்த மையங்களில் தற்காலிக மருத்துவர்கள், புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இரண்டாம் கட்டமாக, தலா 25 லட்சம் ரூபாய் மதிப்பில், ஓரிக்கை, ஏகாம்பரநாதர் கோவில் தேரடி தெரு உள்ளிட்ட ஐந்து இடங்களில் கட்டப்பட்ட நகர்நல வாழ்வு மையங்கள், தற்போது வரை திறக்கப்படாமலேயே உள்ளன.நகரில் இயங்கும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்நல வாழ்வு மையங்களில் பல்வேறு வசதி குறைபாடுகளும், சேவை குறைபாடுகளும் தொடர்வதாக நோயாளிகள் புகார் தெரிவிக்கின்றனர். மாநகராட்சியின், 26வது வார்டில் உள்ள மகாலிங்கம் நகரில் செயல்படும் நகர்நல வாழ்வு மையத்தில், குளிர்சாதன பெட்டி, சுற்றுச்சுவர் போன்றவை கூட இல்லை. சுற்றிலும் பார்த்தீனியம் செடிகள் வளர்ந்துள்ளன. இவை தீங்கு விளைவிக்கக்கூடியது.முக்கிய மருந்து பொருட்களை வைக்க கூட குளிர்சாதன பெட்டி இல்லாததால், இருப்பு வைத்து பாதுகாப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. விஷ்ணுநகரில் உள்ள நகர்நல வாழ்வு மையத்திலும் சுற்றுச்சுவர் இன்றி பாதுகாப்பு குறைபாடுடன் மருத்துவமனை செயல்படுகிறது.சுற்றுப்புறத்தில் மது பாட்டில்களை குடிமகன்கள் உடைத்துவிட்டு செல்கின்றனர். மேலும், நாய், மாடு போன்றவை அசுத்தம் செய்கின்றன. திருக்காலிமேடு எம்.ஜி.,ஆர்., நகர், மகாலிங்கம் நகர், விஷ்ணு நகர் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் நகர்நல வாழ்வு மையங்களில் நோயாளிகள் குடிக்க கூட தண்ணீர் கிடையாது.மருத்துவர்கள், செவிலியர்கள் என, மருத்துவமனை ஊழியர்கள் பணிக்கு வரும்போது, குடிநீரை எடுத்து வர வேண்டிய அவலநிலை உள்ளது. ஏற்கனவே செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்களும், புதிதாக திறந்து செயல்படும் நகர்நல வாழ்வு மையங்களிலும் மின்தடை ஏற்பட்டால், மாற்று ஏற்பாடாக ஜெனரேட்டர் அல்லது இன்வெட்டர் வசதி இல்லாதது பெரும் குறையாகவே உள்ளது. இதனால், நோயாளிக்கு இ.சி.ஜி., எடுக்கும்போது மின்தடை ஏற்பட்டு சிரமம் ஏற்படுகிறது. நத்தப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில், கர்ப்பிணியருக்கான பரிசோதனை நடக்கிறது. ஆனால், கர்ப்பிணியர் அமர போதிய இருக்கைகள் கூட இல்லாததால் பலரும் தரையில் அமர வேண்டிய சூழல் நிலவுகிறது.போதிய இருக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என, கர்ப்பிணியர் கோரிக்கை விடுக்கின்றனர். காஞ்சிபுரம் நகரில் இயங்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்நல வாழ்வு மையங்களில் நிலவும் இதுபோன்ற பிரச்னைகளால் நோயாளிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கின்றனர். எனவே, சுற்றுச்சுவர், குடிநீர், இருக்கை, ஜெனரேட்டர் போன்ற உட்கட்டமைப்பு குறைபாடுகளை சரிசெய்ய, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.இரண்டாம் கட்டமாக கட்டப்பட்ட ஐந்து நகர்நல வாழ்வு மையங்கள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. தமிழகம் முழுதும் புதிதாக கட்டப்பட்ட நகர்நல வாழ்வு மையங்கள் திறக்க வேண்டியுள்ளது. அவை திறக்கப்பட்டவுடன், மருத்துவர்கள் நியமிக்கப்படுவர். மருத்துவர்களுக்கான பணி நியமனங்களுக்கு தேர்வு நடக்கிறது. விரைவில் மருத்துவர்களும் நியமிக்கப்படுவர். ஜெனரேட்டர், குளிர்சாதன பெட்டி, சுற்றுச்சுவர் போன்ற அடிப்படை வசதிகளுக்கு, படிப்படியாக நிதி ஒதுக்கி பணி மேற்கொள்ளப்படுகிறது.அருள்நம்பி,மாநகராட்சி நகர்நல அலுவலர்,காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ