சுற்றுச்சுவர், பராமரிப்பு இல்லாத உத்திரமேரூர் காவலர் குடியிருப்பு
உத்திரமேரூர்:உத்திரமேரூரில், பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே, காவலர் குடியிருப்பு உள்ளது. மூன்று தளங்களை கொண்ட இந்த குடியிருப்பில், 12 காவலர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.கடந்த 2015ம் ஆண்டு கட்டப்பட்ட, இந்த குடியிருப்பை சுற்றி சுற்றுச்சுவர் இல்லாமல் உள்ளது. குடியிருப்பின் பின்புறம் திறந்தவெளியாக இருப்பதால், அருகிலுள்ள குளத்தில் இருந்து பாம்பு உள்ளிட்ட விஷஜந்துக்கள் குடியிருப்பு பகுதியை நோக்கி வருகின்றன.இதனால் அங்கு வசித்து வரும் காவலர் குடும்பத்தினர், பெரும் அச்சத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், குடியிருப்பின் பின்புறமும் முறையாக பராமரிப்பு இல்லாததால் செடி, கொடிகள் அதிகளவில் வளர்ந்து உள்ளன.எனவே, காவலர் குடியிருப்பின் பின்புறம் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றி, அப்பகுதியில் சுற்றுச்சுவர் அமைக்க, துறை அதிகாரிகளுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.