வேளாங்கண்ணி சர்ச் தேர் திருவிழா கோலாகலம்
ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுார் வேளாங்கண்ணி சர்ச்சில், 17ம் ஆண்டு ஆசிர்வாத பெருவிழாவை முன்னிட்டு, திருத்தேர் பவனி விழா, நேற்று முன்தினம் வெகு விமரிசையாக நடந்தது. ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள வேளாங்கண்ணி சர்ச்சில், 17ம் ஆண்டு ஆசிர்வாத பெருவிழா ஆக. 30ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. எட்டு நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், 7ம் நாளான நேற்று முன்தினம் திருத்தேர் பவனி விழா நடைபெற்றது. பங்கு தந்தை சுதாகர் தலைமையில் நடைபெற்ற தேர் பவனி விழாவில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம்பிடித்து இழுத்தனர். கோவிலில் இருந்து புறப்பட்ட தேர், பாரதி நகர், காந்தி சாலை, திருமங்கையாழ்வார் சாலை வழியாக, மீண்டும் கோவிலை வந்தடைந்தது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த, 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.