உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / புத்தகங்கள் வைக்க இடமற்ற வாலாஜாபாத் கிளை நுாலகம்

புத்தகங்கள் வைக்க இடமற்ற வாலாஜாபாத் கிளை நுாலகம்

வாலாஜாபாத்:வாலாஜாபாத் கிளை நுாலகம் போதிய இடவசதி இல்லாமல் சிறிய கட்டடத்தில் இயங்குவதால், மூன்றில் ஒரு பங்கு அளவிற்கான புத்தகங்கள் மட்டுமே நுாலகத்தில் வைத்து பயன்படுத்தும் அவலம் உள்ளது. வாலாஜாபாத்தில் கடந்த ஆண்டுகளில் ரயில்வே மேம்பாலம் அருகே கிளை நுாலகம் இயங்கி வந்தது. இந்த நுாலகத்திற்கான கட்டடம் மிகவும் பழுதடைந்ததை அடுத்து அக்கட்டடம் கைவிடப்பட்டு பேரூராட்சிக்கு சொந்தமான ஒரு கட்டடத்தில் தற்போது செயல்படுகிறது. இதில், வாலாஜாபாத் மற்றும் சுற்றி உள்ள கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள், மாணவர்கள் என 4,900 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தற்போதைய கட்டடமும் பழுதான நிலையில் போதிய இடவசதி இல்லாமல் உள்ளது. இதனால், நுாலகத்திற்கான ஒட்டுமொத்த புத்தகங்களையும் நுாலகத்தில் வைத்து பயன்படுத்த இயலாமல் மூன்றில் ஒரு பங்கு புத்தகம் மட்டுமே தற்போது நுாலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. மற்ற புத்தகங்கள் பாதுகாப்பான வேறொரு பொது கட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனால், வாலாஜாபாத் நுாலகத்திற்கு ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இருந்தும் வாசகர்கள் மற்றும் மாணவர்கள் தேவையான புத்தகங்களை தேவையான நேரத்தில் பெற முடியாத நிலை உள்ளது. எனவே, வாலாஜாபாத் நுாலகத்திற்கு புதிய கட்டட வசதி ஏற்படுத்தி அனைத்து புத்தகங்ளையும் அதில் வைத்து பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசகர் உள்ளிட்ட பல தரப்பினரும் எதிர்பார்த்துள்ளனர். இதுகுறித்து, வாலாஜாபாத் கிளை நுாலக ஊழியர் ஒருவர் கூறியதாவது, வாலாஜாபாத் நுாலகத்தில் மொத்தம் 65,000 புத்தகங்கள் உள்ளன. இதில், இடவசதிக்கேற்ப 20,000 வரையிலான புத்தகங்கள் நுாலகத்தில் வைக்க முடிகிறது. மற்ற புத்தகங்கள் நுாலகம் அருகில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது. எனினும் அப்புத்தகங்களை குறிப்பிட்ட நாட்களில் சுழற்சி முறையில் நுாலகத்தில் பயன்படுத்துகிறோம். நுாலகத்திற்கு புதிய கட்டட வசதி ஏற்படுத்த இடம் தேர்வு, நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதிய கட்டட வசதிக்கு பிறகு ஒட்டுமொத்த புத்தகங்களும் நுாலகத்தில் வைத்து பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை