அடிப்படை வசதிகள் இல்லாத வாலாஜாபாத் பஸ் நிலையம்
வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சியில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மேலும், வாலாஜாபாத் சுற்றிலும் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், தினசரி வாலாஜாபாத் பேருந்து நிலையம் வந்து, அங்கிருந்து சுற்றியுள்ள பிற பகுதிகளுக்கு பேருந்து பிடித்து செல்கின்றனர்.இப்பேருந்து நிலையத்தில் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தாமல் உள்ளதாக பயணியர் உள்ளிட்ட பல தரப்பினரும் கூறி வருகின்றனர்.இதுகுறித்து, பயணியர் சிலர் கூறியதாவது:,பொது குடிநீர் வசதி ஏற்படுத்தவில்லை. சுகாதாரமான முறையில் கழிப்பறை வசதி இல்லாததால், பயணியர் பலரும் அவதிபடுகின்றனர்.பேருந்து நிலையத்தில் இருக்கை வசதி ஏற்படுத்தாததால், பேருந்துக்கு காத்திருக்கும் நேரங்களில் சிரமபட வேண்டி உள்ளது.மேலும், காஞ்சிபுரம் - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் காஞ்சிபுரத்தில் இருந்து, வாலாஜாபாத் வழியாக பல கிராமங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள், பேருந்து நிலையத்திற்கு உள்ளே வராமல் ரவுண்டனா வழியாக நேரடியாக பிரதான சாலை வழியாக இயக்கப்படுகிறது.இதனால், பேருந்து நிலையத்திற்குள் பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர், எந்த பேருந்து எப்போது வருகிறது என, தெரியாமல் குழப்பம் அடைகின்றனர்.எனவே, வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் நேர கண்காணிப்பாளர் அறை ஏற்படுத்தி, ஊழியர்கள் நியமித்து பேருந்துகள் வருகை குறித்து ஒலிபெருக்கி வாயிலாக அறிவிப்பு செய்தல் உள்ளிட்ட தேவையான வசதி ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.