வாலாஜாபாத் பதிவுத்துறை ஊழியர் ரூ.20 லட்சம் கட்டிங் கேட்டு பேரம்
காஞ்சிபுரம், பெண்டிங் பத்திரம் பெறுவதற்கு, வாலாஜாபாத் பத்திரப்பதிவு அலுவலக ஊழியர், 20 லட்சம் ரூபாய் பேரம் பேசுவதாக, காஞ்சிபுரம் கலெக்டரிடம், வாலாஜாபாத் ஒன்றிய கவுன்சிலர் மனு அளித்துள்ளார். காஞ்சிபுரம் கலெக்டரிடம், வாலாஜாபாத் ஒன்றிய கவுன்சிலர் முத்தியால்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த பிரேமா ரஞ்சித்குமார் அளித்த மனுவில் கூறியதாவது: வள்ளுவப்பாக்கம் கிராமம், புல எண்- 45/4பி2, 45/5 ஏ2, 45/5பி, 45/7, 45/11,45/12 ஆகிய எண்கள் அடங்கிய ஐந்து ஏக்கர் நிலத்தை, ஆறு கோடி ரூபாய்க்கு கிரையம் பெற்றுள்ளேன். அந்த இடத்தை, வீட்டுமனைப் பிரிவுகளாக மாற்றி, விற்பனை செய்வதற்கு நகர் அமைப்பு துறை அனுமதி பெறப்பட்டுள்ளது. ஒரு சதுர அடிக்கு, 250 ரூபாய் வீதம் வழி காட்டி மதிப்பீட்டின் அடிப்படையில், பதிவு கட்டணமாக, 55.82 லட்சம் ரூபாய் செலுத்தி உள்ளேன். கடந்த மாதம், 22ம் தேதி, பத்திரப்பதிவு செய்து கொடுக்க டோக்கனும் பெற்றுள்ளேன். வாலாஜாபாத் பத்திரப்பதிவு அலுவலகத்தில், பதிவாளர் பணியிடம் காலியாக உள்ளது. இருப்பினும், அந்த அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வம் என்பவர், நீங்கள் பதிவு செய்யும் நிலம், காஞ்சிபுரம் மாநகராட்சி எல்லையில் வருகிறது. ஆகையால், அதன் வழி காட்டி மதிப்பு சதுர அடிக்கு 800 ரூபாய் செலுத்த வேண்டும் என கூறி உள்ளார். இருப்பினும், பெண்டிங் என அழைக்கப்படும் நிலுவை ஆவணமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த கட்டுமான ஒப்பந்ததாரர் மூலமாக, 20 லட்சம் கொடுத்தால், பதிவு செய்து ஆவணத்தை வழங்குகிறேன் என, பதிவுத்துறை ஊழியர் பேரம் பேசி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.