மலையாங்குளம் சாலையில் பைப்லைன் உடைப்பால் குடிநீர் வீண்
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், காவாம்பயிர் - செய்யாறு ஆற்றுப்படுகையில்,இருந்து, ஆழ்துளை கிணறு வாயிலாக குடிநீர் உறிஞ்சப்படுகிறது. இந்த குடிநீர், பூமிக்கடியில் புதைக்கப்பட்ட பைப்லைன் வாயிலாக, உச்சிகொல்லிமேடு, மலையாங்குளம் ஆகிய பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.இந்நிலையில், மலையாங்குளம் சாலையில், பூமிக்கடியில் புதைக்கப்பட்டுள்ள பைப்லைனில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், சாலையில் குடிநீர், ஒராண்டாக வீணாகி வருகிறது.விரிசல் ஏற்பட்டுள்ள இடத்தில், தொடர்ந்து குடிநீர் வெளியேறுவதால், பச்சை நிறத்தில் பாசி உருவாகி, அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள்,வழுக்கி விழுந்து விபத்தும் ஏற்பட்டு வருகிறது.மேலும், குடிநீரில் கிருமிகள் கலந்து, சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழலும் உள்ளது. இதை சீரமைக்க, துறை சார்ந்த அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர்.எனவே, விரிசல் ஏற்பட்டுள்ள குடிநீர் பைப்லைனை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.