வாலாஜாபாதில் 12வது வார்டில் குடிநீர் தட்டுப்பாடு
காஞ்சிபுரம்:வாலாஜாபாத் பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் இருக்கும் குடியிருப்புகளுக்கு, பாலாறு படுகையில் இருந்து, திறந்தவெளி கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளின் வாயிலாக, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.கோடை காலம் துவங்குவதற்கு முன், இரு தினங்களுக்கு ஒரு முறை பேரூராட்சி நிர்வாகம் வினியோகம் செய்து வந்தது. இதையடுத்து, சில தினங்களாக வாரத்திற்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்ய வேண்டி சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.பாலாற்றில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு பம்பிங் செய்யப்படும் தண்ணீர் குழாய் ஆங்காங்கே உடைப்பு ஏற்படுகிறது. மேலும், குடிநீர் வினியோகம் செய்யும் குழாய் சரியாக திறப்பதில்லை என, குடியிருப்புவாசிகள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.உதாரணமாக, 12வது வார்டில் இருக்கும் குடியிருப்புகளுக்கு, ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் சரியில்லை என, அப்பகுதியினர் இடையே புலம்பலை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, பொது மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.எனவே, கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு இன்றி வினியோகம் செய்ய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.