உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சியில் பட்டு சேலைக்கான ஜரிகை தட்டுப்பாடு பதுக்குவதாக நெசவாளர்கள் குற்றச்சாட்டு

காஞ்சியில் பட்டு சேலைக்கான ஜரிகை தட்டுப்பாடு பதுக்குவதாக நெசவாளர்கள் குற்றச்சாட்டு

காஞ்சிபுரம்: பட்டு சேலை நெய்வதற்கு தேவைப்படும் ஜரிகைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், ஜரிகையை வியாபாரிகள் பதுக்கி, அதிக விலைக்கு விற்க திட்டமிடுவதாகவும் நெசவாளர்கள் தெரிவிக்கின்றனர். காஞ்சிபுரத்தில் நெய்யப்படும் பட்டு சேலையின் முக்கிய மூலப்பொருளாக ஜரிகை உள்ளது. தங்கம், வெள்ளி, காப்பர், பட்டு இழை போன்ற பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஜரிகை, பட்டு சேலையின் பெரும்பகுதியில் கோர்த்து நெய்யப்படுகிறது. காஞ்சிபுரத்தில் பட்டு நெசவுக்கு பயன்படுத்தப்படும் இந்த ஜரிகை, குஜராத் மாநிலம் சூரத் நகரில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அதேசமயம், காஞ்சிபுரம் ஓரிக்கையில் உள்ள தமிழக அரசின் உற்பத்தி நிறுவனத்திலும் ஜரிகை தயாரிக்கப் படுகிறது. இந்த இரு வகையில் கிடைக்கும் ஜரிகையை, வியாபாரிகள் பலரும் வாங்கி, சில்லறையாகவும், மொத்தமாகவும் விற்கின்றனர். தங்கம், வெள்ளி விலையின் விலை, கடந்த ஒரு ஆண்டில் பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில், ஜரிகை விலையும் கணிசமாக உயர்ந்துவிட்டது. தற்போது, 242 கிராம் கொண்ட ஜரிகை தொகுப்பு, 32,000 ரூபாய் வரை விற்கப்படுவதாக, பட்டு சேலை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். தங்கம் விலை அன்றாடம் மாறுவது போல், ஜரிகை விலையும் அன்றாடம் மாறுபடுகிறது. இதனால், வியாபாரிகள் பலரும் ஜரிகையை பதுக்குவதாக, நெசவாளர்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். காஞ்சிபுரம் நகரில் உள்ள முக்கிய கடைகளில் ஜரிகை, சமீப நாட்களாக கிடைப்பதில்லை என நெசவாளர்கள் தெரிவிக்கின்றனர். நாளுக்கு நாள் விலை கூடுவதால், ஜரிகையை பதுக்கி, விலை அதிகரித்து விற்க வியாபாரிகள் திட்டமிடுவதாக நெசவாளர்கள் தெரிவிக்கின்றனர். பட்டு சேலை நெய்வதற்கு தேவைப்படும் ஜரிகை போதிய அளவில் கிடைக்காததால், பட்டு சேலை உற்பத்தியில் சிக்கல் நிலவுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ