உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / விளம்பர பதாகைகளை அகற்ற நடவடிக்கை எடுக்காதது ஏன்? அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் பாய்ச்சல்

விளம்பர பதாகைகளை அகற்ற நடவடிக்கை எடுக்காதது ஏன்? அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் பாய்ச்சல்

காஞ்சிபுரம்;காஞ்சிபுரத்தில், குப்பை கிடங்கில் நிலவும் பிரச்னைகள், விதிமீறல் விளம்பர பதாகைகள் மீது நடவடிக்கை இல்லை என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து, நேற்றைய மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள், அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டம், அண்ணா அரங்கம் முதல் மாடியில், மேயர் மகாலட்சுமி தலைமையில் நேற்று நடந்தது. இதில், மாநகராட்சி கமிஷனர் பாலசுப்ரமணியம், துணை மேயர் குமரகுருநாதன், கவுன்சிலர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள், அதிகாரிகள் விவாதித்ததாவது: கமலக்கண்ணன், - தி.மு.க.,: குப்பை கிடங்கு தானாக பற்றி எரிவதாக கூறுவதை ஏற்க முடியாது. குப்பை கிடங்கில் தரம் பிரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதே கிடையாது. குப்பை கிடங்கை மண்ணை போட்டு மூடியுள்ளனர். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்? பாலசுப்ரமணியம், கமிஷனர்: குப்பை கிடங்கில் ஆய்வு செய்கிறோம். ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதிக்கப்படும். ஏற்கனவே பில் தொகையில் ஒரு பகுதியை நிறுத்தி வைத்துள்ளோம். சூர்யா, - தி.மு.க., : கிழக்கு ராஜவீதியில், குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக ஒரு வாரமாக கூறி வருகிறேன். அதிகாரிகள் இதுவரை அங்கு சென்று பார்க்கவில்லை. மகாலட்சுமி, மேயர் : ஒரு வாரமாக புகார் தெரிவித்தும், அதிகாரிகள் ஏன் அங்கு செல்லவில்லை. இரண்டு நாட்களில், அந்த பிரச்னையை தீர்க்க வேண்டும். பிரவீன்குமார், -- தி.மு.க.,: கமிஷனர் மற்றும் மேயர் கார்களுக்கு, பெயர் பலகை, அரசு சின்னம் போன்றவை அமைக்கும் டெண்டரில், மாநகராட்சி சிவில் ஒப்பந்ததாரர்கள் எப்படி கலந்து கொள்ள முடியும். கார் சம்பந்தமான தொழில் செய்வோர் தானே பங்கேற்க முடியும். பாலசுப்ரமணியம், கமிஷனர்: இந்த பணிக்கான டெண்டரில் சிவில் ஒப்பந்ததாரர்கள் பங்கேற்கலாம். அவர்கள் பணியை மேற்கொள்ளலாம்; அதில், தவறில்லை. கார்த்தி, - தி.மு.க., : மாநகராட்சி பகுதிகளில் வைக்கப்படும் விதிமீறல் விளம்பர பதாகைகள் பற்றி, இரு மாதங்கள் முன் புகார் அளித்தேன். இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. கணேசரங்கன், நகரமைப்பு அலுவலர்: நாங்கள் விளம்பர பதாகைகளை ஆய்வு செய்து, 11 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளோம். மேலும், விளம்பர பதாகைகளுக்கு கலெக்டர் அலுவலகம் தான் அனுமதி கொடுக்கிறது. கார்த்தி, - தி.மு.க.,: நோட்டீஸ் கொடுத்து ஒரு மாதமாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நடவடிக்கை எடுக்க போதிய அவகாசம் இருந்தும் நகரமைப்பு அலுவலர், இதில் பாரபட்சமாக நடந்து கொள்கிறார். உடனடியாக விதிமீறி விளம்பரம் செய்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கணேசரங்கன், நகரமைப்பு அலுவலர்: நான் எந்த பாரபட்சமும் காட்டவில்லை. நோட்டீஸ் கொடுத்துள்ளேன்; அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பாலசுப்ரமணியம், கமிஷனர் : இன்றே கோப்புகளை ஆய்வு செய்து, அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். கயல்விழி, - தி.மு.க.,: 46வது வார்டில், சரியான வரி விதிப்பு செய்யப்படவில்லை. பல சாலைகள் மண் சாலைகளாக உள்ளன. மாநகராட்சியுடன் எங்கள் பகுதிகள் இணைக்கப்பட்டு, 15 ஆண்டுகளாகியும் இதுவரை சாலை வசதி இல்லை. பன்னீர்செல்வம், உதவி பொறியாளர் : இப்போதும் சில சாலைகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. முன்னுரிமை அடிப்படையில், உங்கள் வார்டுக்கு சாலை போடப்படும். சரஸ்வதி, - தி.மு.க.,: மாநகராட்சி முழுதும் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. எனது வார்டில், நாய்களால் கடிபட்டு பலரும் சிகிச்சையில் உள்ளனர். மகாலட்சுமி, மேயர்: நாய்கள் பிடிக்கும் பணி துவங்கி விட்டது. முதலில், 50 நாய்கள் பிடித்துள்ளோம். அவற்றுக்கு கருத்தடை சிகிச்சை அளித்து, அதே இடத்தில் திரும்ப விட்ட பின், அடுத்தகட்டமாக, 50 நாய்கள் பிடிக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி