காட்டுபன்றிகளால் விபத்து அபாயம்
காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் நகரம், அதை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில், பிரதான சாலைகள் மற்றும் கிராமப்புற சாலைகள் உள்ளன. இந்த சாலைகளின் வழியாக சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில், மக்கள் தங்களின் பல்வேறு தேவைக்கு பயணம் செய்கின்றனர். ஆடு, மாடு, நாய்கள் ஆகிய விலங்குகள் வாகனங்களின் குறுக்கே புகுந்து விபத்தை ஏற்படுத்தி வந்தன. இதில், 125க்கும் மேற்பட்டோர் இரு ஆண்டுகளில் இறந்துள்ளனர்; பலர் காயமடைந்துள்ளனர்.அந்த வரிசையில், காட்டுப்பன்றிகளால் வாகன விபத்து அதிகரித்து வருகிறது. இரு மாதங்களுக்கு முன், காஞ்சிபுரம் - பரந்துார் சாலையில் காட்டுப்பன்றி வேகமாக சாலையை கடந்த போது, இருசக்கர வாகனத்தில் சென்றவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.இரண்டு தினங்களுக்கு முன், தினம் வையாவூர் பகுதியைச் சேர்ந்த டாஸ்மாக் ஊழியர் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது காட்டுப்பன்றி மோதி இறந்துள்ளார்.எனவே, நீர் வளத்துறை, ஊரக வளர்ச்சி துறை ஏரிகளில் பதுங்கி இருக்கும் காட்டுப்பன்றிகளை பிடிக்க, சம்பந்தப்பட்ட வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.