மானாம்பதி கூட்டு சாலையில் உயர்கோபுர விளக்கு அமைக்கப்படுமா?
உத்திரமேரூர்:காஞ்சிபுரம் --- வந்தவாசி நெடுஞ்சாலை 38 கிலோ மீட்டர் தூரம் உடையது. இந்த சாலையில், மானாம்பதி கூட்டுச்சாலை உள்ளது. இந்த கூட்டுச்சாலை வழியாக சென்னை, செங்கல்பட்டு, உத்திரமேரூர் ஆகிய பகுதிகளில் இருந்து, தினமும் 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்தவாசி, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றன.இந்நிலையில், சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள மக்களும், மானாம்பதி கூட்டுச்சாலைக்கு தினமும் வந்து, பல்வேறு பகுதிகளுக்கு பேருந்து பிடித்து வேலை, கல்லூரி, மருத்துவமனை ஆகியவற்றுக்கு செல்கின்றனர்.இதனால், இக்கூட்டுச்சாலை எப்போதும் போக்குவரத்து நிறைந்த, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாக உள்ளது.மேலும், இரவு நேரங்களில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பெண்களும் தனியார் தொழிற்சாலைக்கு சென்று, மீண்டும் கூட்டுச்சாலையில் வந்து இறங்கி வீட்டிற்கு செல்கின்றனர்.அப்போது, மானாம்பதி கூட்டுச்சாலையில் உயர்கோபுர மின் விளக்கு இல்லாததால் போதிய வெளிச்சம் இல்லாமல் உள்ளது.இதனால், இரவு நேரங்களில் அச்சத்துடன் பெண்கள் கடந்து செல்கின்றனர். எனவே, மானாம்பதி கூட்டுச்சாலையில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.