வரத்து அதிகரிப்பால் சுரைக்காய் கிலோ ரூ.15
சீட்டணஞ்சேரி, உத்திரமேரூர் ஒன்றியத்தில், பாலாற்றங்கரையொட்டி குருமஞ்சேரி, சீட்டணஞ்சேரி, ஆத்தங்கரை, பினாயூர், களியப்பேட்டை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில், நெல், கரும்பு பிரதான தொழிலாக இருந்தாலும், இணை பயிராக தோட்டப் பயிர்கள் சாகுபடி செய்வதும் வழக்கத்தில் உள்ளது.அவ்வாறு, சுரைக்காய், பாவை, கோவை, அவரை, புடலை உள்ளிட்ட காய் வகைகளையும் இப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து பயிரிட்டு வருகின்றனர். சுரைக்காய் சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகள் தற்போது அறுவடை செய்து வருகின்றனர்.அறுவடையான காய்களை செங்கல்பட்டு சந்தையில் விற்பனை செய்கின்றனர். இந்நிலையில், சுரைக்காய் எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை என, கவலை அடைந்துள்ளனர்.கடந்த மாதம் ஒரு கிலோ 25 ரூபாய் வரை விலை போனதாகவும், தற்போது சந்தைக்கு சுரைக்காய் வரத்து அதிகரிப்பால், 10 - 15 ரூபாய் வரை மட்டுமே விலை போவதாக அப்பகுதி விவசாயிகள் கூறியுள்ளனர்.