உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / குமரி மாவட்டத்தில் இருந்து நவராத்திரி பவனி சிங்காரி மேளத்துடன் சிறுமியர் மலர் தூவல் : வழி நெடுக பக்தி பரவசம்

குமரி மாவட்டத்தில் இருந்து நவராத்திரி பவனி சிங்காரி மேளத்துடன் சிறுமியர் மலர் தூவல் : வழி நெடுக பக்தி பரவசம்

தக்கலை :திருவனந்தபுரத்தில் நடக்கும் நவராத்திரி விழாவிற்கு பத்மனாபபுரத்தில் இருந்து குமரி மாவட்ட சுவாமி விக்ரகங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக கல்குளம் இருந்த போது பத்மனாபபுரம் அரண்மனையில் மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்தனர். மன்னர் மார்த்தாண்டவர்மா ஆட்சியின் போது சிறிது காலம் அரசவை கவிஞராக இருந்தார் கவிசக்ரவர்த்தி கம்பர். இவர் வழிபட்டுவந்த சரஸ்வதி தேவிக்கு ஆண்டுதோறும் நவராத்தி விழாவில் பத்மனாபபுரம் அரண்மனையில் 10 நாட்கள் சிறப்பு பூஜைகள் மன்னர் நடத்தி வந்தார்.தலைநகர் பத்மனாபபுரத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்ட பின் 1840ல் சுவாதி திருநாள் மகாராஜா காலத்தில் நவராத்திரி விழா திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது. இவ்விழாவிற்கு பத்மனாபபுரம் தேவாரகெட்டு சரஸ்வதி அம்மன், வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை சுவாமி விக்ரகங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, அங்கு 10 நாட்கள் நவராத்திரி விழா நடந்து வந்தது.இந்நிகழ்ச்சி மன்னர்கள் ஆட்சிக்கு பின்னரும் கேரள அரசு சார்பில் நடக்கிறது. இந்த ஆண்டு நவராத்திரி விழா வரும் 27ல் துவங்குவதை முன்னிட்டு குமரி மாவட்ட சுவாமி விக்ரகங்களை கொண்டு செல்லும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. சுவாமிக்கு பாதுகாப்பாக முன்னால் கொண்டு செல்லும் மன்னர் பயன்படுத்திய உடைவாளை எடுத்து கொடுக்கும் நிகழ்ச்சி பத்மனாபபுரம் அரண்மனை உப்பரிகை மாளிகையில் நடந்தது.காலை 7.20க்கு கேரள மாநில தேவசம்போர்டு மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவகுமார் உடைவாளை எடுத்து குமரி மாவட்ட தேவசம்போர்டு இணை ஆணையாளர் ஞானசேகரிடம் கொடுத்தார். பின் வாள் கோயில் ஊழியரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பின் 7.28க்கு தேவாரக்கெட்டு சரஸ்வதி அம்மன் விக்ரகம் எடுத்து வரப்பட்டது. முன்னதாக சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது.காலை 7.33க்கு நெற்றிப்பட்டம் கட்டிய யானை மீது சரஸ்வதி விக்ரகம் ஊர்வலமாக புறப்பட்டது. வேளிமலை முருக பெருமானும், சுசீந்திரம் முன்னுதித்த நங்கையும் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சரஸ்வதி தேவியோடு பயணித்தனர். 8.03க்கு சுவாமி விக்ரகங்கள் பத்மனாபபுரம் அரண்மனைக்கு வந்தது. அரண்மனை நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு, வலிய காணிக்கையும் வழங்கப்பட்டது.அங்கிருந்து 8.15க்கு புறப்பட்டு கேரள மற்றும் தமிழக அரசு போலீஸ் பாதுகாப்புடன் பேன்ட் வாத்தியம் முழங்க, சிங்காரி மேளத்துடன் சிறுமியரும், பெண்களும் மலர் தூவ அரண்மனையில் இருந்து புறப்பட்டு வெள்ளிரிஏலா ஜங்ஷனில் பக்தர்களின் வரவேற்பை பெற்று கொண்டு மேட்டுக்கடை வழியாக கேரளபுரம் மகாதேவர் கோயில் வந்தடைந்தது.மதிய உணவிற்கு பின் அங்கிருந்து புறப்பட்டு இரவு குழித்துறை மகாதேவர் கோயில் வந்தடைந்தது. இன்று காலை 9 மணிக்கு குழித்துறையில் இருந்து புறபட்டு இன்றிரவு நெய்யாற்றின்கரை கிருஷ்ணன்கோயிலில் தங்கல் நடக்கிறது. நாளை(26ம் தேதி) காலை அங்கிருந்து புறப்பட்டு திருவனந்தபுரம் செல்கிறது.திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோயில் நவராத்திரி மண்டபத்தில் சரஸ்வதி தேவியும், ஆரியசாலை பகவதி அம்மன் கோயிலில் முன்னுதித்த நங்கையும், செந்திட்டை பகவதி அம்மன் கோயிலில் முருக பெருமான் விக்ரகங்கள் பூஜைக்காக வைக்கப்படுகின்றன. வரும் 27ல் நவராத்திரி பூஜை துவங்கி 10 நாட்கள் நடக்கிறது.விழா முடிந்தவுடன் சுவாமி விக்ரகங்கள் மீண்டும் குமரி மாவட்டம் கொண்டு வரப்படுகின்றன. முன்னதாக நேற்று அரண்மனையில் நடந்த நிகழ்ச்சியில் கேரள மாநில பாறசாலை தொகுதி எம்.எல்.ஏ., ஜார்ஜ், பத்மனாபபுரம் எம்.எல்.ஏ., டாக்டர் புஸ்பலீலா ஆல்பன், கேரள தொல்பொருள் ஆய்வுத்துறை இயக்குனர் பொறுப்பு ராஜூகுமார், பத்மனாபுரம் அரண்மனை அதிகாரி ஏனெஸ்ட், அரண்மனை கான்ட்ராக்டர்கள் விஜயகுமாரன் தம்பி, ஸ்ரீகாந்த், ராஜன், தேவசம்போர்டு கண்காணிப்பாளர் நிர்மல்குமார், மேலாளர் சிவகுமார், பத்மனாபபுரம் நகராட்சி கவுன்சிலர்கள் கொச்சு கிருஷ்ணபிள்ளை, ஹரிகுமார், ரேணுகா, நாகராஜன், உண்ணிகிருஷ்ணன், பா.ஜ., மாவட்ட செயலாளர் டாக்டர் சுகுமாரன், தமிழ்நாடு சிவசேனா மாநில பொதுச்செயலாளர் சிவாஜி, ராகுல்காந்தி நகர்மன்ற தலைவர் மாகீன், பத்மனாபபுரம் நகராட்சி தலைவருக்கு போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் சத்தியாதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.திருவனந்தபுரம் மாவட்ட போலீஸ் உதவி கமிஷனர் சித்திரசேனன் தலைமையில் போலீசார் பாதுகாப்புக்காக சுவாமி ஊர்வலத்தில் சென்றனர். இதுபோல் தக்கலை டி.எஸ்.பி., சுந்தர்ராஜ் தலைமையில் களியக்காவிளை, அருமனை, திருவட்டார், தக்கலை இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.அரண்மனை உப்பரிகை மாளிகையில் வைத்து உடைவாள் எடுத்து கொடுக்கும் போதும், சரஸ்வதி தேவி விக்ரகம் எடுத்து வரும் போதும், யானை மீது தேவியை அமர வைக்கும் போதும், அரண்மனையில் முதல் மரியாதை செலுத்தும் போதும் கேரள போலீசார் துப்பாக்கி ஏந்தி மரியாதை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி