உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / போலீஸ் பாதுகாப்புடன் வீடுகள் இடிப்பு : திற்பரப்பு அருகே பரபரப்பு

போலீஸ் பாதுகாப்புடன் வீடுகள் இடிப்பு : திற்பரப்பு அருகே பரபரப்பு

திற்பரப்பு : திற்பரப்பு அருகே பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வீடுகள் இடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.களியலில் இருந்து திற்பரப்பு வரும் வழியில் களியல் பாலம் முதல் முக்குரோடு ஜங்ஷன் வரை ரோட்டின் இரு பக்கங்களிலும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான புறம்போக்கு இடம் உள்ளது. இங்கு பலர் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். இந்நிலையில் முக்குரோடு ஜங்ஷன் அருகே வசித்து வரும் ஒருவர் புறம்போக்கு நிலங்களில் உள்ள வீடுகளை அப்புறப்படுத்த கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.கடந்த 2004ம் ஆண்டு கோர்ட் உத்தரவுப்படி மூன்று வீடுகள் அப்புறப்படுத்தப்பட்டது. ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேறு இடம் இல்லாததால் அப்பகுதியில் மீண்டும் வீடுகள் கட்டி குடியிருந்து வந்தனர். தொடர்ந்து பலமுறை வீடுகளை அப்புறப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இந்நிலையில் கோர்ட் ஆமீன் முன்னிலையில் தற்போது பிரச்னைக்குரிய பகுதியில் உள்ள இரண்டு வீடுகள் அப்புறப்படுத்தப்பட்டது. குலசேகரம் இன்ஸ்பெக்டர் பரமசிவம், சப் இன்ஸ்பெக்டர் பத்மனாபபிள்ளை தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.ஜே.சி.பி., மூலம் வீடுகள் இடிக்கும் போது, வீட்டின் உரிமையாளர்கள் கிரேஸி மற்றும் லட்சுமி போலீசாரிடம் மாற்றிடம் இல்லாததால் தங்கள் வீடுகளை இடிக்கக்கூடாது என அழுதபடி கேட்டனர். கிரேஸியின் கணவரும், லட்சுமியின் மகன் மற்றும் குடும்பத்தினரும் வீடுகள் இடிக்கும் போது சம்பவ இடத்தில் இல்லை.இதனால் வீட்டில் உள்ள பொருட்களை வீடு இடிக்கப்பட்ட பகுதியின் அருகே ரோட்டோரத்தில் குவிக்கப்பட்டது. இதன் அருகே இவர்கள் அழுதபடி இருந்தது பரிதாபமாக இருந்தது. போலீஸ் பாதுகாப்புடன் வீடுகள் இடிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.பா.ஜ., மாவட்ட பொறுப்பாளர் வக்கீல் சுஜித்குமார் உட்பட பலர் சம்பவ இடம் வந்தனர். குடியிருக்க வேறு இடம் இல்லாததால் தொடர்ந்து ரோட்டோரத்தில் இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ