திருமணம் செய்வதாக நகை மோசடி மதுரையைச் சேர்ந்த 4 பெண்கள் கைது
நாகர்கோவில்: மனைவியை பிரிந்து இருந்தவரை திருமணம் செய்வதாக கூறி 64 கிராம் நகையை திருடியதாக மதுரையைச் சேர்ந்த 4 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே அனந்த நாடார் குடிகார விளை பகுதியைச் சேர்ந்தவர் நற்சீசன் 55. எல்.ஐ.சி. ஏஜென்ட். இவர் மனைவியை பிரிந்து வாழ்கிறார். குடும்ப நலக் கோட்டில் விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தனது தாயாரை கவனித்துக் கொள்வதற்காக இரண்டாவதாக திருமணம் செய்ய இணையதளத்தில் பதிவு செய்திருந்தார்.மதுரையைச் சேர்ந்த ஒரு பெண் நற்சீசனை அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி ஒரு போட்டோவை அனுப்பி வைத்தார். அவரை திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாகவும் குடும்பத்தோடு பார்க்க வருவதாகவும் கூறினார். நற்சீசன் வீட்டுக்கு நான்கு பெண்கள் வந்தனர். பின்னர் ஊருக்கு சென்று தகவல் செல்வதாக கூறிவிட்டு சென்றனர்.இரண்டு நாட்கள் கடந்த நிலையில் மேஜர் டிராயரில் இருந்த 64 கிராம் நகையை தேடிய போது அது மாயமாகியிருந்தது. வீட்டுக்கு வந்த மதுரை பெண்களின் அலைபேசியில் தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.இது பற்றி நற்சீசன் ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மதுரையைச் சேர்ந்த முருகேஸ்வரி 34, கார்த்தியாயினி 30, முத்துலட்சுமி 35, போதும் பொண்ணு 40, ஆகியோரை கைது செய்தனர்.