அவதுாறாக பேசிய வழக்கு; கோர்ட்டில் ஆஜரான அமைச்சர்
நாகர்கோவில்; நாகர்கோவிலில், அதிகாரியை அவதுாறாக பேசிய வழக்கில், குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று ஆஜரானார். கன்னியாகுமரி மாவட்டத்தில், 2018ல் நடந்த கூட்டுறவு சங்க தேர்தலின் போது, தேர்தல் அதிகாரியாக கூட்டுறவு இணைப்பதிவாளர் நடுக்காட்டு ராஜா செயல்பட்டார். அப்போது ஆளுங்கட்சியாக இருந்த அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக அவர் செயல்பட்டதாக கூறி, கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் இணை பதிவாளர் அலுவலகத்தில் தி.மு.க., -- காங்., சார்பில் முற்றுகை நடந்தது. இதில், அப்போதைய எம்.எல்.ஏ.,க்கள் மனோ தங்கராஜ், சுரேஷ் ராஜன், ராஜேஷ் குமார், பிரின்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, போராட்டக்காரர்கள் தன்னை அவதுாறாக பேசியதாக, நடுக்காட்டு ராஜா, நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார். மனோ தங்கராஜ், சுரேஷ் ராஜன், ராஜேஷ்குமார் உள்ளிட்ட 13 பேர் மீது, போலீசார் வழக்கு பதிந்தனர். வழக்கு, நாகர்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், நேற்று விசாரணைக்கு வந்தது. அமைச்சர் மனோ தங்கராஜ், சுரேஷ் ராஜன், ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., மற்றும் நிர்வாகிகள் ஆஜராகினர். விசாரணை செப்., 8க்கு ஒத்திவைக்கப்பட்டது.