| ADDED : செப் 28, 2011 12:42 AM
அருமனை : வேட்புமனுவுடன் தாக்கல் செய்யும் உறுதிமொழி ஆவணத்திற்கு முத்திரைத்தாள்கள் கிடைக்காததால் வேட்பாளர்களுக்கு அலைச்சல் ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் 17 மற்றும் 19ம் தேதிகளில் நடக்கிறது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பல்வேறு கட்சிகள், அமைப்புகளை சார்ந்தவர்கள், சுயேச்சைகள் என்று பலர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் போது அத்துடன் முத்திரைத்தாளில் உறுதி மொழி ஆவணம், தாக்கல் செய்யப்பட வேண்டும். குமரி மாவட்டத்தில் தற்போது 10, 20, 50 உள்ளிட்ட முகமதிப்பினை உடைய முத்திரைத்தாள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உறுதிமொழி ஆவணத்திற்கு முத்திரைத்தாள்கள் கிடைக்காமல் வேட்பு மனுத்தாக்கல் செய்பவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. முத்திரைத்தாள்கள் வாங்க வேண்டி பல இடங்களுக்கும் அலைந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே முத்திரைத்தாள் தட்டுப்பாட்டிற்கு நிரந்தர தீர்வு ஏற்பட வழிவகை செய்ய வேண்டுமென்று அனைவரும் விரும்புகின்றனர்.