| ADDED : ஆக 17, 2011 02:26 AM
களியக்காவிளை : தி.மு.க., பேச்சாளர் வாகை முத்தழகன் கைது செய்யப்பட்டார். களியக்காவிளையில் அண்மையில் தி.மு.க., பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தி.மு.க., தலைமை பேச்சாளர் வாகை முத்தழகன் தரக்குறைவாக பேசியதாக விளவங்கோடு தொகுதி அ.தி.மு.க., செயலாளர் உதயகுமார் களியக்காவிளை போலீசில் புகார் செய்தார். இதை போல் காங்., தலைவர் சோனியாவையும் தரக்குறைவாக பேசியதாக காங்., நிர்வாகிகளும் புகார் கூறினர். இந்நிலையில் வாகை முத்தழகன் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். இதை தொடர்ந்து தி.மு.க., பேச்சாளர் வாகை முத்தழகன், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், களியக்காவிளை பேரூர் செயலாளர் ஜெயசந்திரன், மேல்புறம் ஒன்றிய பொருளாளர் மாகின் அபுபக்கர் உட்பட ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக வாகை முத்தழகன் ஜாமீன் பெற்றார். இந்நிலையில் அ.தி.மு.க., விளவங்கோடு தொகுதி செயலாளர் உதயகுமார் மற்றும் நண்பர்கள் குழித்துறை ஜங்ஷனில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த வாகை முத்தழகன் உதயகுமாரை தரக்குறைவாக பேசி மிரட்டி சென்றதாக உதயகுமார் களியக்காவிளை போலீசில் புகார் கூறினார். களியக்காவிளை இன்ஸ்பெக்டர் சுதேசன் தலைமையில் போலீசார் வாகை முத்தழகனை கைது செய்து, குழித்துறை கோர்ட்டில் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் மாரியப்பன் முன்னிலையில் ஆஜர் படுத்தினர். 15 நாள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.