மழை குறைந்து காற்றின் வேகம் தணிந்தது குமரியில் கடலில் குளிக்க அனுமதி
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை குறைந்து காற்றின் வேகமும் குறைந்ததால் கடலில் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது.இம்மாவட்டத்தில் கடந்த வாரம் கனமழை பெய்தது. பெரும்பாலான அணைகள் அதன் முழு கொள்ளளவை நெருங்கியுள்ளன. கன்னிப்பூ சாகுபடி பணிகள் வேகமடைந்துள்ளது. மழையுடன் பலத்த காற்றும் வீசியதால் கன்னியாகுமரியில் கடலில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. திரிவேணி சங்கமம் பகுதியில் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்குவதை தடுக்க கயிறு கட்டி தடுப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது.இந்நிலையில் ஜூன் 15 முதல் இம்மாவட்டத்தில் மழை பெய்யவில்லை. லேசான வெயில் அடிக்கிறது. மழை குறைந்ததை தொடர்ந்து காற்றின் வேகம் குறைந்துள்ளதால் கன்னியாகுமரி கடலில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். திற்பரப்பு அருவியிலும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.