போலீஸ் ஜீப் மீது கார் மோதி மூன்று போலீசார் படுகாயம்
நாகர்கோவில்:நாகர்கோவில் அருகே நான்கு வழிச்சாலையில் போலீஸ் ரோந்து ஜீப் மீது கார் மோதி மூன்று போலீசார் படுகாயம் அடைந்தனர். நாகர்கோவில் அருகே வெள்ளமடம் அருகே நான்கு வழிச்சாலையில் நேற்று முன்தினம் இரவு நெடுஞ்சாலை ரோந்து போலீசார் பணியில் இருந்தனர். குளச்சலில் இருந்து திருநெல்வேலி சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து போலீஸ் ரோந்து ஜீப் பின்னால் மோதியது. இதில் ஜீப் தூக்கி வீசப்பட்டு பல்டி அடித்து ரோட்டோர பள்ளத்தில் தலைக்குப்பற கவிழ்ந்தது. இதில் இருந்த எஸ்.ஐ., முருகன் 58, ஆயுதப்படை போலீஸ்காரர் சுபாஷ் 36, செல்வகுமார் 42 ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஜீப் முழுமையாக நொறுங்கியது. கிரேன் மூலம் பின் ஜீப் மீட்கப்பட்டது. ஆரல்வாய்மொழி போலீசார் விசாரிக்கின்றனர்.