உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஏரியை ஆக்கிரமித்துள்ள சீமைகருவேலமரங்களை அகற்ற வலியுறுத்தல்

ஏரியை ஆக்கிரமித்துள்ள சீமைகருவேலமரங்களை அகற்ற வலியுறுத்தல்

கரூர், :கிருஷ்ணராயபுரம் அருகில் உள்ள, வளையல்காரன்புதுார் ஏரியில் ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, வளையல்காரன்புதுார் ஏரி, 100 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதன் மூலம் நேரடியாக, 125 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. மறைமுகமாக நிலத்தடிநீர் மட்டம் உயர்வது மூலம், நுாற்றுக்கணக்கான ஏக்கர் சாகுபடி நடக்கிறது. தற்போது பெய்த வட கிழக்கு பருவமழை காரணமாக, ஏரியில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. ஆனால் பல ஆண்டுகளாக ஏரி, துார் வாரப்படாமல் உள்ளது.இது குறித்து, அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:கிருஷ்ணராயபுரம் அருகில் வளையல்காரன்புதுாரில் உள்ள ஏரி, காவிரி ஆற்றின் அருகில் இருந்தாலும், நிலத்தடி நீரை நம்பி விவசாயம் நடந்து வருகிறது. ஏரிகளில் வரும் மழை தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, நிலத்தடி நீராக கிணறுகள் மூலம் பெற்று விவசாயம் செய்து வருகின்றனர். இதில், நேரடியாக பாசன வசதி பெறும் நிலங்கள் மிகவும் குறைவாக உள்ளது. இதற்கு காரணம் ஏரியும், அதன் கால்வாய்கள் அனைத்திலும் சீமை கருவேல மரங்கள் பல ஆண்டுகளாக வளர்ந்து உள்ளது.எனவே, ஏரி நீரை பாசனத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளோம்.சீமை கருவேல மரங்கள், 150 அடிக்கு கீழ் சென்று தண்ணீரை உறிஞ்சுவதால், ஏரிகளில் நீண்ட நாள் தண்ணீர் நிற்பதில்லை. அதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. இனிமேலாவது, மரங்களை முற்றிலும் அகற்றி விட்டு, துார் வார வேண்டும்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ