மதுவில் கண்ணாடி துகள்கள் குடிமகன்கள் வாக்குவாதம்
கிருஷ்ணராயபுரம்: மாயனுார் அரசு மாதுபான கடையில் வாங்கிய மதுபாட்டிலில், கண்ணாடி துகள்கள் இருந்ததால், 'குடி'மகன்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் அடுத்த முடக்குசாலை அருகே, அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு மாயனுார் சுற்றுப்புற பகுதியில் இருந்து தினமும் ஏராளமான, 'குடி'மகன்கள் மது வாங்கி குடித்து வருகின்றனர். நேற்று மதியம், மாயனுாரை சேர்ந்த இருவர், மது பாட்டில்கள் வாங்கி குடித்தனர். அப்போது, மது பாட்டிலின் உள்புறத்தில் பாட்டிலின் உடைந்த கண்ணாடி துகள்கள் சிதறி கிடந்தன. இதனால் மது குடித்த, 'குடி' மகன்கள் அச்சத்தில் உள்ளனர். தொடர்ந்து, டாஸ்மாக் கடைக்கு சென்று விற்பனையாளர்களிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள், 'நீங்கள் மது பாட்டில் வாங்கும்போது பார்த்து வாங்க வேண்டும். குடித்து விட்டு வந்து கேட்டால் எப்படி நாங்கள் பதில் கூற முடியும்' என, தெரிவித்துள்ளனர். இதனால், 'குடி'மகன்கள் சூழ்ந்து கொண்டு கடையின் முன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.