உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தொடர் மழை, அணை நீர்மட்டம் திருப்திகரம் பணப்பயிர் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்

தொடர் மழை, அணை நீர்மட்டம் திருப்திகரம் பணப்பயிர் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்

கரூர், செப். 8-தொடர் மழை மற்றும் அணைகளின் நீர்மட்டம் திருப்திகரமாக உள்ளதால், கரூர் மாவட்ட விவசாயிகள், பணப்பயிர்களுக்கு மாறி வருகின்றனர்.கரூர் மாவட்டத்தில், காவிரியாற்றின் கரையோர பகுதிகளான மறவாப்பாளையம், தளவாப்பாளையம், வேலாயுதம்பாளையம், நன்னியூர், செவிந்திப்பாளையம் வாங்கல், நெரூர், திருமாக்கூடலுார், மாயனுார், கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை, குளித்தலை உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன் நெல், வாழை, மஞ்சள், கரும்பு உள்ளிட்ட பணப்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன. குறிப்பாக, முப்போகத்தில் நெல் சாகுபடி பணிகள் நடந்தன.நாளடைவில் மழை குறைவு, மேட்டூர் அணை உள்ளிட்ட பல்வேறு அணைகளின் நீர்மட்டம் போதிய அளவு இல்லாததால், விவசாயிகள் பாய்கள் தயாரிக்க பயன்படும் கோரை, வெற்றிலை, சூரியகாந்தி சாகுபடிக்கு மாறினர். இந்நிலையில் நடப்பாண்டு, தென்மேற்கு பருவமழை, ஓரளவுக்கு பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழையும், தேவையான அளவு பெய்யும் என, மத்திய, மாநில வானிலை மையங்கள் அறிவித்துள்ளது. மேலும், மேட்டூர் அணை உள்ளிட்ட பல்வேறு அணைகளின் நீர்மட்டம் திருப்திகரமாக உள்ளதால், கரூர் மாவட்டத்தில் காவிரியாற்றின் கரையோர பகுதிகளில் உள்ள விவசாயிகள், மீண்டும் பணப்பயிர்களுக்கு மாறி வருகின்றனர்.இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது:குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து நடப்பாண்டு, தாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது, குறுவை சாகுபடி அறுவடை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், பருவமழையும் எதிர்பார்த்த அளவில் பெய்துள்ளதால், விவசாய கிணறுகள், போர்வெல்களுக்கு நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது. மேலும், நடப்பாண்டு மேட்டூர் அணை நீர்மட்டமும், 116 அடியை தாண்டிய நிலையில் உள்ளது. கர்நாடாக மாநில அணைகளில் இருந்து, தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், சம்பா சாகுபடிக்காக வரும் ஜன., 24 வரை தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. பவானிசாகர் அணை, அமராவதி அணைகளின் நீர்மட்டமும், திருப்திகரமாக உள்ளதால், அந்த அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரும், கரூர் மாவட்ட காவிரியாற்று பகுதிக்கு வரும். கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில், மழை பெய்து வருவதால், நொய்யல் ஆற்றில் வரும் தண்ணீரும், கரூர் மாவட்ட காவிரியாற்றில் சேரும்.இதனால், கரூர் மாவட்ட விவசாயிகள், பணப்பயிர்களான நெல், கரும்பு, வாழை, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களை நடப்பாண்டு மீண்டும், நடவு செய்ய நிலங்களை தயார்படுத்தி வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை