உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மழைநீர் வடிய வழியின்றி வடிகால் மூடல்

மழைநீர் வடிய வழியின்றி வடிகால் மூடல்

கரூர்: வடிகாலை ஒட்டி உள்ள சாலையில், 'பேவர் பிளாக்' கல் பதிக்கப்பட்டுள்ளதால், மழைநீர் செல்ல வழியின்றி குளம்போல் தேங்கி நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.கரூர், சுங்ககேட் முதல் வெங்ககல்பட்டி வரை, மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், 3 கி.மீ., துாரத்துக்கு, 20 கோடி ரூபாயில் நடைபாதையுடன் வடிகால் வசதி பணி நடந்து வருகிறது. வடிகால் வசதி, 3.45 அடி ஆழமும், 3.45 அடி அகலமும் உள்ளவாறு கட்டப்படுகிறது.மழை காலங்களில் சாலையில் செல்லும் மழைநீர் எளிதாக இருபுறமும் உள்ள வடிகால் உள்ளே செல்வதற்கு வசதியாக, 20 அடிக்கு ஒரு இடத்தில் வலையுடன் கூடிய துளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சாலையோரத்தில் உள்ள மரங்களில், கட்டாயமாக அகற்ற வேண்டியவை மட்டுமே அகற்றிவிட்டு, மீதமுள்ள மரங்கள் அகற்றப்படாமல் அதற்கு ஏற்றார்போல், சாலை அமைக்கப்பட்டுள்ளது. வடிகால் பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு ஏதுவாக, 'பேவர் பிளாக்' கல் பதிக்கப்பட்டு வருகிறது.ஆனால், திட்டமிட்டபடி ஒப்பந்ததாரர் கட்டுமான பணி மேற்கொள்ளவில்லை. மாறாக, பல இடங்களில் மழைநீர் வடிகால் முழுவதும் இடைவெளி விடாமல், 'பேவர் பிளாக்' கல் பதிக்கப்படுகிறது. சாலையில் தேங்கும் மழைநீர் செல்ல வழியில்லை. சில இடங்களில் மழைநீர் வெளியேற வைக்கப்படும் வடிகால், சாலை மட்டத்திலிருந்து சற்று உயரத்தில் உள்ளது. சாலையில் மழைநீர், அரை அடி தேங்கிய பின் தான், மழைநீர் வடிகாலை எட்டி பார்க்கும். மாநில நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள மழைநீர் வடிகால் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சாலையில் தேங்கும் மழைநீர் எளிதில் வடிந்து செல்வதுபோல வடிகால் அமைக்காமல், சாலையோரத்தில் தடுப்பணையாக வடிகால் மாற்றப்பட்டுள்ளது.மழைக்காலத்தில், இந்த வடிகாலை ஒட்டியுள்ள பகுதிகளில் தடுப்பணை போல தண்ணீர் தேங்கி நிற்கும். அதிகாரிகள் இதை கவனித்து, மழை காலத்திற்கு முன், வடிகால் குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, தமிழக நெடுஞ்சாலைத்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) மாவட்ட கோட்ட பொறியாளர் ரவிக்குமார் கூறுகையில், ''ஒப்பந்ததாரரிடம் கூறி, சாலையில் தேங்கும் தண்ணீர் வடிகால் வழியாக வெளியேறும் படி கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை