குளித்தலையில் வி.ஏ.ஓ., சங்க பொதுக்குழு கூட்டம்
குளித்தலை: தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின், குளித்தலை அலுவலகத்தில் பொதுக்குழு கூட்டம் நேற்று வட்ட தலைவர் கணேசன் தலைமையில் நடந்தது. மாநில தலைவர் அழகிரிசாமி, சங்க செயல்பாடுகள், உறுப்பினர்களுக்கு உள்ள சலுகைகள் மற்றும் பணி சுமையை சமாளித்தல் குறித்து ஆலோசனை வழங்கினார். கரூர் மாவட்ட தலைவர் நாகமணிகண்டன், மாவட்ட செயலாளர் ரவி, இணை செயலாளர் குணசேகரன், வட்ட செயலாளர் அண்ணாதுரை, பொருளாளர் கீதா, வட்ட பொறுப்பாளர்கள் கரும்பாச்சலம், அழகர் ஆகியோர் பேசினர்.கூட்டத்தில், டிஜிட்டல் கிராப் சர்வே பணியில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகள் தொடர்பாகவும், அரசிடம் கையடக்க கணினி மற்றும் கிராப் சர்வே பதிவிற்கு தொகுப்பூதியம் வழங்குவது தொடர்பாகவும், குளித்தலை காவேரி ஆற்றில் மணல் திருடுவதை தடுக்கும் பொருட்டு, கிராம நிர்வாக அலுவலர்களே ஒரு நாளைக்கு மூன்று பிரிவாக பிரித்து, பணியில் அமர்த்தப்படுவதன் மூலம், மக்களுக்கு தேவையான கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. எனவே, இப்பணியை இரவில் மட்டும் பொதுப்பணி துறையுடன், காவல்துறை மற்றும் வருவாய்த்துறை சேர்ந்து கூட்டு ரோந்து பணி செய்ய வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.சங்க பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.