உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / 100 சதவீத தேர்ச்சி பெற திட்டம்; மாணவர்களைதேர்வெழுத விடாமல் தடுத்த அரசு பள்ளி

100 சதவீத தேர்ச்சி பெற திட்டம்; மாணவர்களைதேர்வெழுத விடாமல் தடுத்த அரசு பள்ளி

100 சதவீத தேர்ச்சி பெற திட்டம்; மாணவர்களைதேர்வெழுத விடாமல் தடுத்த அரசு பள்ளிகிருஷ்ணராயபுரம்:திருக்காம்புலியூர் அரசு பள்ளியை சேர்ந்த இரு மாணவர்களை, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விடாமல் தடுத்த நிலையில், கலெக்டர் உத்தரவின் பேரில், நேற்று ஆங்கில தேர்வு எழுதினர்.கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே, மேட்டு திருக்காம்புலியூர் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 43 மாணவ, மாணவியர், 10ம் வகுப்பு தேர்வை கடந்த, 28 முதல் எழுதி வருகின்றனர். மாயனுார், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில், இப்பள்ளி மாணவ, மாணவியர் தேர்வு எழுதி வருகின்றனர். அதில் இரண்டு மாணவர்கள் சரிவர படிக்காததால், தேர்ச்சி விகிதம் குறையும் என பள்ளி நிர்வாகம் கருதி உள்ளது. அவர்களுக்கு, ஹால் டிக்கெட் வழங்கவில்லை. மாணவர்களிடம் ஏதோ காரணங்களை சொல்லி, நீங்கள் தேர்வு எழுத செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.அதன்படி இரு மாணவர்களும் மார்ச், 28ல் நடந்த தமிழ் பாடத்திற்கு தேர்வு எழுத செல்ல வில்லை. தேர்வு மையத்தில் இருந்த ஆசிரியர்கள், மற்ற மாணவர்களிடம் உங்கள் பள்ளியை சேர்ந்த இரு மாணவர்கள் தேர்வெழுத வரவில்லை. அவர்களை, ஆங்கில பாடத்திற்கு தேர்வு எழுத வரும்படி அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து, இரு மாணவர்களும் மாயனுார் அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்திற்கு நேற்று காலை தேர்வெழுத சென்றனர்.இதையறிந்த, மேட்டு திருக்காம்புலியூர் அரசுப்பள்ளி ஆங்கில ஆசிரியை அமுதா, நேரில் சென்று இரு மாணவர்களையும் அழைத்து, உங்கள் பெற்றோரிடம் சொல்லி விடுகிறேன். தற்போது எழுதினால் தேர்ச்சி பெற மாட்டீர்கள். அடுத்த முறை தேர்வு எழுதி கொள்ளலாம் என கூறி அழைத்து கொண்டு, அவர்கள் வீட்டில் விட்டு விட்டு பெற்றோரிடம் தகவலை தெரிவித்துள்ளார்.ஆனால், மாணவர்களின் பெற்றோர், உடனடியாக இரு மாணவர்களை மீண்டும் தேர்வு மையத்திற்கு அழைத்து வந்தனர். இது குறித்து கலெக்டர் தங்கவேலுவிடம் புகார் சென்றது. அவரது உத்தரவின்படி, இரு மாணவர்களும் மதியம், 12:00 மணிக்கு மேல் தேர்வு எழுத தொடங்கினர். கூடுதலாக ஒரு மணி நேரம் கொடுத்து, தேர்வை எழுத சொல்லி அனுப்பி வைத்தனர்.இது குறித்து மாணவர் ஒருவரின் பெற்றோர் கூறுகையில்,'என் மகனுக்கு ஹால் டிக்கெட் வழங்கவில்லை என்று தெரிந்தவுடன், தலைமையாசிரியர் செல்வத்திடம் கேட்டேன். உங்கள் மகனுக்கு வருகை பதிவு போதிய அளவில்லை என்றார். அதற்கு, மகனுக்கு உடல் நலம் பாதிப்பு காரணமாக, 15 நாட்கள் வர முடியவில்லை என்றேன். இன்று (நேற்று) சக மாணவர்கள் ஹால் டிக்கெட் வந்து விட்டது என்று கூறிய பின், தேர்வெழுத மகன் வந்தார்' என்றார்.இது குறித்து, கரூர் மாவட்ட சி.இ.ஓ., செல்வமணி (பொறுப்பு) கூறுகையில்,'' இரு மாணவர்களும் தமிழ் தேர்வு எழுத வரவில்லை என, திருக்காம்புலியூர் பள்ளி தலைமையாசிரியர் செல்வம், ஆசிரியர் அமுதா கூறினர். இருந்தும், நேற்று சிறப்பு சலுகை அடிப்படையில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து தலைமை ஆசிரியர், ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ