பானிபூரி வியாபாரிக்கு அடி பெண் உள்பட 4 பேர் கைது
கரூர்: கரூரில் பானிபூரி வியாபாரியை, உருட்டு கட்டையால் அடித்ததாக பெண் உள்பட, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் குமார், 32; பானிபூரி வியாபாரி. இவர், கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, அமராவதி ஆற்றுப்பகுதி கருப்பாயி கோவில் தெருவில், பானிபூரி கடை போட்டிருந்தார். அப்போது, அதே பகுதியில் பானிபூரி கடை போட்டிருந்த நாமக்கல் பகுதியை சேர்ந்த பிரியா, 32, என்ற பெண்ணுக்கும், குமாருக்கும் கடந்த, 31ல் வாய் தகராறு ஏற்பட்டது. அதில், குமாரை, பிரியா மற்றும் அவருடன் இருந்த கருணாகரன், 25, சூர்யா, 25, அய்யனார், 25, ஆகிய நான்கு பேரும் சேர்ந்து, உருட்டு கட்டையால் அடித்தனர்.அதில், காயமடைந்த குமார், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, குமாரின் தந்தை மாதேஷ், 54, கொடுத்த புகார்படி, பிரியா உள்பட, நான்கு பேரை கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.