சுப்புராயரெட்டியூரில் தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை தேவை
கரூர், சுப்புராயரெட்டியூரில், தார்ச்சாலை வசதியை உடனடியாக செய்து தர வலியுறுத்தி, கிராம மக்கள் கரூர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.அதில், கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டம், ஜெகதாபி பஞ்சாயத்துக்குட்பட்ட சுப்புராயரெட்டியூர் கிராமத்தில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில், தார்ச்சாலை அமைப்பதற்காக ஜல்லி கற்கள் கொட்டப்பட்டது. பின், செம்மண் மட்டும் கொட்டி சமப்படுத்தி விட்டு தார்ச்சாலை அமைக்காமல் கிடப்பில் போட்டு விட்டனர்.தற்போது ஜல்லிக்கற்கள் முழுவதுமாக பெயர்ந்து, இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத அளவு மோசமான நிலையில் சாலை உள்ளது. சுப்பாரெட்டியூர் பிரிவு முதல், ஊர் கோவில் வழியாக செல்லும் சாலை, பொரணி பிரிவு முதல் பொக்கிஸ்தார் வீட்டு டேங்க் வழியாக மதுக்கரை வரை சாலை வழியாக செல்ல வேண்டும். இங்கு பணிகள் கிடப்பில் போடப்பட்டதால், பல இன்னல்களுக்கு ஆளாகி வருகிறோம்.அவசர உதவிக்கு கூட வாகனங்கள் வர முடியவில்லை. உடனடியாக தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.