தி.மு.க., கவுன்சிலருக்கு அவப்பெயர் ஏற்படுத்த அ.தி.மு.க., திட்டம்; செந்தில்பாலாஜி பேட்டி
கரூர், ''தி.மு.க., கவுன்சிலருக்கு, அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்று, அ.தி.மு.க., வக்கீல் திட்டமிட்டு செயல்பட்டிருப்பது தெரிகிறது,'' என, கரூர் எம்.எல்.ஏ.,செந்தில்பாலாஜி தெரிவித்தார்.கரூர் அருகே மண்மங்கலத்தில், 'உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்' நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற, எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கரூர் மாவட்டத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், 179 இடங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், 60 முகாம் நிறைவு பெற்றுள்ள நிலையில், 49,333 கோரிக்கை மனுக்கள் மக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், 200 கோடி ரூபாய் மதிப்பில், தண்ணீர்பந்தல்பாளையம் முதல் வீரராக்கியம் வரை, புதிய சுற்றுவட்டச்சாலை அமைப்பதற்கான நிதி, அரசாணை வழங்கியுள்ளனர். இதில் முதல்கட்டமாக நிலமெடுப்பதற்காக, 72 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு கூறினார்.புகழூர் நகராட்சி தி.மு.க., 15வது வார்டு கவுன்சிலர் சபீனா கணவரும், தி.மு.க., நிர்வாகியுமான நவாஸ்கான், குடிநீர் வரவில்லை என கேட்டதால், ஆத்திரத்தில் ஒருவரை தாக்கியது தொடர்பான நிருபர்களின் கேள்விக்கு, செந்தில் பாலாஜி பதிலளிக்கையில், ''இப்பிரச்னையில் தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும்போது, அ.தி.மு.க., வக்கீல் எதற்காக கலந்து கொண்டார். நகராட்சியில் சாலை, குடிநீர் பிரச்னை தொடர்பாக கவுன்சிலர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நகராட்சி தலைவர், எம்.எல்.ஏ.,விடம் புகார் தெரிவிக்க வாய்ப்பு உள்ளது. தி.மு.க., கவுன்சிலருக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என, அ.தி.மு.க., வக்கீல் திட்டமிட்டு செயல்பட்டு இருப்பது தெரிகிறது. இது குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்படும்,'' என்றார்.