முன் விரோதத்தில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டி கொலை
குளித்தலை: வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர், முன் விரோதத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டார். கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த பெரியபனையூரை சேர்ந்தவர் கார்த்திக், 29; ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி சிவரஞ்சனி. தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பெரிய பனையூரில், ஒரு மாதத்துக்கு முன், ஜோதிகா என்ற பெண் ஆட்டோ ஓட்டுநர், கார்த்திக் தன்னை தாக்கிய தாக கொடுத்த புகாரின்படி, நங்கவரம் போலீசார், அவரை சிறையில் அடைத்தனர். செப்., 29ல் ஜாமினில் வந்த கார்த்திக், நேற்று முன்தினம் இரவில், தன் சித்தப்பா வீட்டில், தன் இரு தங்கை யருடன் துாங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு, 12:15 மணியளவில் ஐந்து பேர் கொண்ட கும்பல், அவரது வீட்டின் தகர கதவை உடைத்து உள்ளே புகுந்து, கார்த்திக்கை அரிவாளால் வெட்டி படுகொலை செய்து தப்பியது. நங்கவரம் போலீசார், குளித்தலை டி.எஸ்.பி., செந்தில்குமார் சம்பவ இடத்தில் விசாரித்தனர். கார்த்திக் படுகொலை செய்யப்பட்ட வீட்டில், இரு தங்கையர், தாய், தந்தையிடம் கரூர் எஸ்.பி., ஜோஸ் தங்கையா நேரடியாக விசாரித்தார். இதில், கார்த்திக்கை கொலை செய்தது பெரிய பனையூரை சேர்ந்த லோகநாதன், கிஷோர், நவீன்ராஜா, சூர்யா, 16 வயது சிறுவன் என, தெரிந்தது. இவர்கள், ஜோதிகாவை தாக்கிய விவகாரத்தில் கார்த்திக்கை கொலை செய்தது தெரிந்தது. ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர்.