உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மாவட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.3,000 கோடியில் வளர்ச்சி பணி

கரூர் மாவட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.3,000 கோடியில் வளர்ச்சி பணி

கரூர், ''கரூர் மாவட்டத்தில், நான்கு ஆண்டுகளில், 3,000 கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்துள்ளது,'' என, கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி தெரிவித்தார்.கரூர் அருகில், வாங்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை விரிவாக்க திட்ட முகாம் நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி முகாமை தொடங்கி வைத்து, நிருபர்களிடம் கூறியதாவது:கரூர் மாவட்டத்தில், 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு வாய் புற்றுநோய் கண்டறிதலும், 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை விரிவாக்க திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் பரிசோதனையின் போது, பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால், மேல் சிகிச்சைக்கு தேவைப்படும் அனைத்து மருத்துவ செலவுகளையும் தமிழக அரசே ஏற்கும்.மாவட்டத்தில், 37 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 7 அரசு மருத்துவமனை, கரூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை உட்பட, 45 மையங்களில் புற்றுநோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூடுதலாக, 101 கிராமப்புற சுகாதார நலவாழ்வு மையங்கள் மற்றும் 4 நகர்புற நலவாழ்வு மையங்கள் உட்பட, 105 மையங்களில் இச்சேவை விரிவுபடுத்தப்பட்டு புற்றுநோய்க்கான இலவச பரிசோதனை வசதி, மக்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே வழங்கப்பட உள்ளது.இதுவரை மாவட்டத்தில் வாய் புற்றுநோய்க்கு, 967 பேர், கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு, 666 பெண்களும் மற்றும் மார்பக புற்றுநோய்க்கு, 747 பெண்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அரசு வேளாண் கல்லுாரி அமைப்பதற்காக, 7 கோடி ரூபாய் மதிப்பிலான, 40 ஏக்கர் நிலம், கல்லுாரி கட்டடம் கட்டுவதற்காக, 76 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் கல்லுாரி கட்டுமான பணி தொடங்கும். 250 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் நிறுவனம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடக்கிறது. மாவட்டத்தில், நான்கு ஆண்டுகளில், 3,000 கோடி ரூபாயில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்துள்ளது.இவ்வாறு கூறினார்.இணை இயக்குனர் (மருத்துவ பணிகள்) செழியன், துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) சுப்பிரமணி, கரூர் ஆர்.டி.ஓ.,முகமது பைசல், நீர்வளத்துறை உதவி பொறியாளர் சதீஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !