உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சின்னாறு அணையிலிருந்து ஏரிகளுக்கு நீர் செல்லும் கால்வாய்களை துார்வார விவசாயிகள் கோரிக்கை

சின்னாறு அணையிலிருந்து ஏரிகளுக்கு நீர் செல்லும் கால்வாய்களை துார்வார விவசாயிகள் கோரிக்கை

தர்மபுரி, நவ. 3-தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளியில், 50 அடி உயரமுள்ள சின்னாறு அணை மூலம், 4,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதிலிருந்து, மாரண்டஹள்ளி அணைக்கட்டு, செங்கன் பசுவன்தலாவ் ஏரி, ஜெர்த்தலாவ் ஏரி, புங்கன்குட்டை, தளவாய்ஹள்ளி ஏரி, முத்துார் ஏரி, ஏ.செட்டிஹள்ளி ஏரி, சீங்கல் ஏரி, கம்மாளப்பட்டி ஏரி, பனங்கள்ளி ஏரி, சோகத்துார் ஏரி, சோழராயன் ஏரி, மற்றும் பாப்பாரப்பட்டி வழியாக, பாலவாடி ஏரி உட்பட, 10க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு உபரி நீர் வெளியேறும் சமயத்தில் தண்ணீர் நிரப்பட்டு வந்தது.கடந்த, 2022ல் பருவமழையின் போது, சின்னாறு நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் கன மழையால், சின்னாறு முழு கொள்ளளவை எட்டியதுடன், 100 நாட்களுக்கு மேல், அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. இதில், குறிப்பிடத்தக்க அளவு தண்ணீர் வீணாக, காவிரியாற்றில் கலந்தது. இதையடுத்து, சோகத்துார், கடகத்துார் பகுதியிலுள்ள சோழராயன் ஏரிகள் உட்பட, பல்வேறு ஆயக்கட்டு ஏரிகளை சேர்ந்த விவசாயிகள் ஒன்றிணைந்து, பஞ்சபள்ளி பகுதியில் இருந்து, 63 கி.மீ., நீள கால்வாய்களை சீரமைத்தனர். இதனால், பல ஆண்டுகளாக நிரம்பாத, கடமடை பகுதியிலுள்ள சோகத்துார், கடகத்துார் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட ஏரிகள், 2022, டிச.,13ல் நிரம்பியதால், 2023ல் தண்ணீர் தட்டுபாடின்றி விவசாயம் செழித்தது. என‍வே, இந்தாண்டு சின்னாறு அணை நிரம்பும் முன், ஏரிகளுக்கு செல்லும் கால்வாய்களை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து, கடகத்துாரை சேர்ந்த விவசாயி சுகுமார் கூறுகையில், ''தற்போது பாலக்கோடு சுற்றுவட்டாரத்தில் அதிக பெய்கிறது. இனி வரும் நாட்களில் கூடுதலாக மழை பெய்தால், அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படும். அப்போது, சின்னாறு அணை தண்ணீர் வீணாக, கடலில் கலப்பதை தடுக்க, அணையிலிருந்து, செங்கன் பசுவன்தலாவ் ஏரி வரையிலான, கால்வாயை வினாடிக்கு, 1,000 கனஅடி தண்ணீர் செல்லும் வகையிலும், செங்கன் பசுவன்தலாவ் ஏரியில் இருந்து ஜெர்த்தலாவ் ஏரி மற்றும் தர்மபுரி அடுத்த ராமாக்காள் ஏரி வரை, வினாடிக்கு, 400 கனஅடி தண்ணீர் செல்லும் வகையிலும், பாசன கால்வாயை சீரமைக்க வேண்டும். அதேபோல், முட்கள் முளைத்து, புதர் மண்டி கிடக்கும் கால்வாய்களை துார்வாரி, ஏரிகளில் நீர் நிரப்ப தேவையான நடவடிக்கை எடுக்க, தர்மபுரி மாவட்ட நிர்வாகத்துக்கு அரசு உத்தரவிட வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ