அரசு கல்லுாரிக்கு சொந்த கட்டடம் அமையபெற்றோர், கல்வியாளர்கள் எதிர்பார்ப்பு
அரவக்குறிச்சி, சமுதாய கூடத்தில் இயங்கி வரும், அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிக்கு சொந்த கட்டடம் அமையுமா என பெற்றோர்கள், கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.கடந்த, 2022ல், இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, அரவக்குறிச்சி மாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள சமுதாய கூடத்தில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தற்காலிகமாக தொடங்கப்பட்டது. இடப்பற்றாக்குறை மற்றும் மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை கருத்தில் கொண்டு, கல்லுாரிக்கு சொந்த கட்டடம் தேவை என மாணவர்கள், கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில், உயர் கல்வித்துறை மீதான விவாதம் சட்டசபையில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிக்கு சொந்த கட்டடம் கட்டுவதற்கு, ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பேசினார். இதனை அரவக்குறிச்சி பொதுமக்கள், கல்வியாளர்கள் வரவேற்றனர்.அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே கல்லுாரிக்கு இடம் ஒதுக்கப்பட்டும், நிதி ஒதுக்கீடு செய்தும் உள்ளனர். தற்போதைய ஆட்சி முடிய இன்னும், 8 மாதங்களே உள்ள நிலையில், கல்லுாரிக்கு சொந்தம் கட்டடம் கட்டுவதற்கான, எவ்வித முன்னெடுப்பு பணியும் நடைபெறவில்லை. எனவே, விரைவில் அரவக்குறிச்சியில், அரசு கல்லுாரிக்கு சொந்த கட்டடம் கட்டப்படுமா என பெற்றோர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.