கரூர் அருகே புறக்காவல் நிலையம் மீண்டும் அமைக்க எதிர்பார்ப்பு
கரூர், கரூர் அருகே, புதிதாக கட்டப்பட்ட உயர்மட்ட மேம்பாலம் திறக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலை பெரிய ஆண்டாங்கோவில் பிரிவில், புறக்காவல் நிலையம் செயல்பட்டு வந்தது. அதில், நாள்தோறும் போலீசார் பணியில் இருந்தனர். இந்நிலையில் கடந்த, 2019ல், பெரிய ஆண்டாங்கோவில் பிரிவில், 24.64 கோடி ரூபாய் செலவில், புதிதாக உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கியது.இதனால், அந்த பகுதியில் செயல்பட்டு வந்த புறக்காவல் நிலையம் மூடப்பட்டது. தற்போது, பெரிய ஆண்டாங்கோவில் பிரிவில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிகள், நிறைவு பெற்றதால் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதையடுத்து, மேம்பாலத்தின் சர்வீஸ் சாலையில், வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக, பெரிய ஆண்டாங்கோவில் பகுதியில் இருந்து, கரூர் நகருக்கு செல்லும் வாகனங்கள், மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள குகை வழிப்பாதை வழியாக செல்கிறது.தற்போது, அந்த பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில், பெரிய ஆண்டாங்கோவில் பிரிவு, சர்வீஸ் சாலையில் மூடப்பட்ட, புறக்காவல் நிலையத்தை அகற்றி விட்டனர். எனவே, பெரிய ஆண்டாங்கோவில் பிரிவில், மீண்டும் புறக்காவல் நிலையத்தை அமைத்து, வழக்கம் போல் நாள்தோறும் போலீசாரை பணியில் அமர்த்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.