வில்லேஜ் மாஸ்டர் இணையதளத்தை பயன்படுத்த விவசாய சங்கம் அறிவுரை
கரூர், தமிழகத்தில் நில மோசடியை தடுக்க, வில்லேஜ் மாஸ்டர் இணையதளத்தை அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என, காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் மகாதானபுரம் ராஜாராம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கிராமப்புறத்தில் உள்ள, நில விபரங்களை தெரிந்து கொள்ள, வில்லேஜ் மாஸ்டர் இணையதளத்தை அரசு உருவாக்கியுள்ளது. ஒரு நிலத்தின் விபரம் தெரியாவிட்டாலும், சர்வே எண், உரிமையாளர் பெயர், நிலத்தின் எல்லை, யார் பெயரில் பட்டா உள்ளது, யார் பெயிரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது, வில்லங்க சான்று, நில வரைப்படம், நிலத்தின் அரசு மதிப்பு உள்ளிட்ட விபரங்களை தெரிந்து கொள்ள முடியும்.அந்த நிலம் எந்த மாவட்டம், எந்த தாலுகா உள்ளிட்ட தகவல்களையும் தெரிந்து கொள்ள இயலும். மேலும், பட்டா இறந்தவர் பெயரில் இருந்தாலும், தவறான பெயரில் இருந்தாலும், இப்போதைய அனுபவ உரிமையாளர் பெயரில் பட்டா மாற்றம் செய்ய, இந்த இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.பல வசதிகளை ஒரே அமைப்பின் மூலம், தமிழக அரசு செய்து, நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால், நில மோசடியை தடுக்கும், இந்த வில்லேஜ் மாஸ்டர் இணைய தளத்தை, அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.