க.பரமத்தியில் கருகும் சோள பயிர்கள் மழையை எதிர்பார்க்கும் விவசாயிகள்
கரூர்:க.பரமத்தி பகுதியில் கொளுத்தும் வெயிலால், கால்நடைகளுக்காக விதைக்கப்பட்ட சோளப் பயிர்கள் கருகி வருவதால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில், கால்நடைகள் வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. இதற்கு முக்கிய தீவனம் சோளத்தட்டு. இங்குள்ள விவசாய நிலங்களில், கால்நடைகளின் தீவனத்துக்காக மட்டுமே சோளம் அதிகளவில் பயிரிடப்படுகிறது. பருவமழை காலங்களில், புன்செய் நிலங்களில் பயிரிடப்பட்ட சோளப் பயிர்கள் வளர்ந்த பின், அறுவடை செய்து அவற்றை சேமித்து பயன்படுத்துவர். அடுத்தாண்டு மீண்டும், சோளத்தட்டு அறுவடை நடைபெறும் வரை கால்நடைகளுக்கு தீவனமாகப் பயன்படுத்தி வருவது வழக்கம்.கடந்தாண்டு போதிய அளவில் பருவ மழை பெய்யவில்லை. இதனால் சோளப்பயிர் கருகியதோடு, போதுமான அளவு வளரவில்லை. தீவன பற்றாக்குறையை போக்க, அதிக விலை கொடுத்து சோளத்தட்டுகளை வாங்கி நீண்டகாலம் கால்நடைகளை வளர்க்க முடியாது. ஏராளமான விவசாயிகள் தங்களது கால்நடைகளை விற்று விட்டனர்.கடந்த மாதத்தில் பெய்த மழையால், சிலர் நிலங்களில் சோளத்தை விதைத்தனர். அவை முளைத்து நன்கு செழித்து வளர்ந்த நிலையில், வெயில் கொளுத்தி வருகிறது. அனலுக்கு தாக்கு பிடிக்க முடியாத இளம் பயிர்கள் காய்ந்து, கருகி வருகின்றன. 10 நாட்களுக்குள் மழை பெய்யவில்லை என்றால், சோளப்பயிர்கள் முழுமையாக கருகும் அபாயம் உள்ளது.