உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தென்மேற்கு பருவமழையை நம்பிமுருங்கை சாகுபடியில் விவசாயிகள்

தென்மேற்கு பருவமழையை நம்பிமுருங்கை சாகுபடியில் விவசாயிகள்

கரூர்:தென்மேற்கு பருவமழை அறிவிப்பால், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியில் முருங்கை சாகுபடி பணிகளை விவசாயிகள் துவங்கியுள்ளனர்.அரவக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளான கொத்தப்பாளையம், தடா கோவில், வெஞ்சாங்கூடலுார், ஈசநத்தம், அம்மாப்பட்டி, ஊத்துார், பெரியமஞ்சுவளி, சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில், 30 ஆயிரம் ஏக்கரில் முருங்கை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. திரட்சியான தடிப்பான அரவக்குறிச்சியில் விளையும் ருசியான முருங்கைக்கு தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு உண்டு.வறட்சியான பகுதியான, அரவக்குறிச்சி வட்டாரத்தில் முருங்கை உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் விலையும் உயர்ந்தது. குறிப்பாக, கடந்தாண்டுகளில் முகூர்த்த சீசன் காலங்களில், ஒரு கிலோ முருங்கை, 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. ஒரு முருங்கைகாய் எட்டு ரூபாயில் இருந்து, 10 ரூபாய் வரை விற்கப்பட்டது.ஆனால், கடந்தாண்டு இறுதியில் வடகிழக்கு பருவ மழை எதிர்பார்த்த அளவில் பெய்தது. அதை தொடர்ந்து, தென்மேற்கு பருவ மழையும் வரும் மே, 15 முதல் பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், அரவக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள, முருங்கை மரங்களை சாகுபடிக்கு தயார்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: கோடை மழை பெய்ய துவங்கியுள்ளதால், முருங்கை மரங்களில், பூக்கள் துளிர்விட ஆரம்பித்துள்ளது. இதனால், காய் உற்பத்தி எதிர்பார்த்த அளவில் இருக்கும். மேலும் காய்கள் முழு வளர்ச்சியடைந்து பெரியளவில் வரும். தற்போது, சித்திரை மாதத்தில், அதிகளவில் திருமணம் சீசன் உள்ளிட்ட சுப காரியங்கள் தொடங்கும். அப்போது அதிகளவில் முருங்கைக்கு தேவை ஏற்படும். இதனால் விலை ஏற வாய்ப்பு உள்ளது. இதனால் வைகாசி, ஆனி, ஆவணி, ஐப்பசி மாதங்களில் முகூர்த்த சீசன் தேவைக்காக, முருங்கை சாகுபடியை தீவிரப்படுத்தி உள்ளோம்.இவ்வாறு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை