புகழூர் டி.என்.பி.எல்., உதவியுடன் சிறப்பு பள்ளிக்கு இலவச பஸ் வசதி
கரூர், புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில், சிறப்பு பள்ளிக்கு பஸ் இயக்க நிதி உதவி வழங்கப்பட்டது.இதன்படி, பள்ளிக்கு பஸ் சேவையை, பொது மேலாளர் (மனிதவளம்) கலைச்செல்வன் தொடங்கி வைத்தார். சமூக மேம்பாட்டு திட்டத்தின் கீழ், காகித ஆலையை சுற்றி அமைந்துள்ள கிராமங்களில் பள்ளிகளின் உட்கட்டமைப்பினை மேம்படுத்திட, பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. இதில், கரூர் மாவட்டம், ஆத்துார், வடமலை கவுண்டனுாரில் சிறப்பு பள்ளி செயல்பட்டு வருகிறது. கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி, பேச்சு பயிற்சி, உளவியல் பயிற்சி போன்றவற்றை வழங்கி வருகிறது.ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில், கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளை இப்பள்ளிக்கு அனுப்புவதில் பெற்றோர்களுக்கு இயலாத நிலையை கருத்தில் கொண்டு, வேலாயுதம்பாளையத்தில் இருந்து வடமலை கவுண்டனுாரில் உள்ள மானவு சிறப்பு பள்ளிக்கு பஸ் இயக்குவதற்கு நிதியுதவியாக மாதம், 50 ஆயிரம் ரூபாய் வழங்க ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி, சிறப்பு குழந்தைகளுக்கான இலவச பஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.நிகழ்ச்சியில், துணை பொது மேலாளர் (பாதுகாப்பு), நாராயணன், உதவி பொது மேலாளர் (பாதுகாப்புத்துறை) சபாபதி, முதன்மை மேலாளர் (மனிதவளம்) சிவக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.