மாவட்டத்தில் வெயில் தாக்கம் அதிகரிப்பு; குறைதீர் கூட்டத்தில் மக்கள் வருகை குறைவு
கரூர்: கோடை வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் மக்கள் வருகை குறைவாக இருந்தது.கரூர் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடந்தது. இதில், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, வங்கி கடன்கள், பட்டா மாறுதல், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளி களுக்கான உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கினர்.எப்போதும், பரபரப் பாக காணப்படும் கலெக்டர் அலுவலகம், நேற்று அடித்த கடுமையான வெயில் காரணமாக, மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது. இதனால், கலெக்டர் அலுவலக வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக நான்கு பயனாளிகளுக்கு காதொலி கருவி, ஆதி திராவிடர் நலத்துறை சார்பாக இருவருக்கு இலவச தையல் இயந்திரங்கள் உள்பட எட்டு பேருக்கு, 9.57 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.கூட்டத்தில், டி.ஆர்.ஓ., கண்ணன், குளித்தலை சப்-கலெக்டர் சுவாதிஸ்ரீ, மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இளங்கோ உள்பட பலர் பங்கேற்றனர்.