நடுரோட்டில் நின்ற லாரியால் கடும் போக்குவரத்து பாதிப்பு
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி பேரூராட்சி அலுவலகம் முன், சிமென்ட் லோடு ஏற்றி வந்த லாரி பழுதடைந்து நின்றதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.அரவக்குறிச்சியில், தாராபுரம் சாலையில் பேரூராட்சி அலுவலகம், வணிக நிறுவனங்கள், டீக்கடைகள் செயல்படுகின்றன. இச்சாலையில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது.றேந்று முன்தினம் மாலை தாராபுரம் சாலையில், சிமென்ட் லோடுடன் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது, பேரூராட்சி அலுவலகம் முன் அமைக்கப்பட்டுள்ள, வேகத்தடையில் ஏறி இறங்கிய போது பழுதடைந்து நடுரோட்டில் நின்றது.அவ்வழியாக வந்து வாகன ஓட்டிகள், சிறிது நேரத்தில் லாரியை சரி செய்து எடுத்து விடுவார்கள் என்று நினைத்தனர். ஆனால் நேற்று மாலை வரை சிமென்ட் லோடுடன் லாரி நடு ரோட்டிலேயே நின்றது. வாகன போக்குவரத்து அதிகம் உள்ள சாலையில், லாரி நின்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும், இது போன்ற செயல்கள் இனி நடைபெறாத வகையில், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.