பயணியர் மாளிகையில் போலீசாருடன் ஐ.ஜி., ஆலோசனை
கரூர், கரூர் பயணியர் மாளிகையில், த.வெ.க., கூட்டம் தொடர்பாக, போலீசாருடன் வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி., அஸ்ரா கார்க் ஆலோசனையில் ஈடுபட்டார்.கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்., 27ம் தேதி இரவு, த.வெ.க., சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் அக்கட்சி தலைவர் விஜய் பேசினார். அப்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, மூச்சுத்திணறி, 41 பேர் உயிரிழந்தனர். த.வெ.க., பொதுக்கூட்டம் சம்பவம் தொடர்பாக, வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க் தலைமையில், சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் கடந்த, 3ல் உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் மதியம், கரூர் வந்த ஐ.ஜி., அஸ்ரா கார்க், வேலுச்சாமிபுரத்தில் த.வெ.க., கூட்டம் நடந்த இடத்தை, ஆய்வு செய்தார்.பிறகு, கரூர் கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள, பயணியர் மாளிகையில் ஐ.ஜி., அஸ்ரா கார்க் இரவு தங்கினார். அடுத்த கட்ட பணிகள் குறித்தும், சம்மன் அனுப்பி யார் யாரை விசாரணைக்கு அழைப்பது குறித்தும், உச்சநீதிமன்றத்தில் ஜாமின் கேட்டுள்ள, த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த், துணை செயலர் நிர்மல்குமார் ஆகியோரின் மனுக்கள் மீது, பதில் அளிப்பது குறித்தும், சிறப்பு புலனாய்வு குழுவில் இடம் பெற்றுள்ள போலீசாருடன் விசாரணை நடத்தினார்.