கரூரில் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் திறப்பு விழா
கரூர், கரூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தின் புதிய கட்டடங்களை, எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி திறந்து வைத்தார்.கரூர் மாநகராட்சியில், 1வது மற்றும் 2வது மண்டலங்களுக்கு புதிய அலுவலக கட்டடங்கள் கட்டப்பட்டு திறப்பு விழா நேற்று நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். இதனை, கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி திறந்து வைத்தார். கரூர் மாநகராட்சி, 1வது மண்டலத்திற்கு பெரிய குளத்துபாளையத்தில், 2.50 கோடி ரூபாய் மதிப்பில் புதிய அலுவலக கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு தரைத்தளம், 517.06 ச.மீ., பரப்பளவிலும், முதல் தளம், 450 ச.மீ., பரப்பளவிலும் என மொத்தம், 967.06 ச.மீ. பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.இரண்டாவது மண்டலத்திற்கு, 2.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பசுபதிபுரம் தெற்கு மடவிளாகத்தில் புதிய அலுவலக கட்டடம் கட்டப்பட்டுள்ளது. தரைத்தளம், 517.06 ச.மீ., பரப்பளவிலும், முதல் தளம் 450 ச.மீ., பரப்பளவிலும் என மொத்தம், 967.06 ச.மீ., பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய் தளம், வருவாய் பிரிவு, கழிப்பறைகள், கணினி மையம் அலுவலகம், முதல் தளத்தில் மண்டல தலைவர் அறை, கூட்ட அரங்கம், கவுன்சிலர்கள் அறை, நகரமைப்பு பிரிவு உள்ளிட்ட அறைகள் உள்ளன.இந்த அலுவலகத்தில் பிறப்பு மற்றும் இறப்பு சான்று, ஆதார் மையம், இ-சேவை மையம், குடிநீர் மற்றும் சொத்து வரி செலுத்துதல், நகரமைப்பு வரைபடம் அனுமதி உள்ளிட்ட சேவைகளை விரைவாக பெறமுடியும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.விழாவில், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி, கரூர் மேயர் கவிதா, கரூர் மாநகராட்சி கமிஷனர் சுதா, துணை மேயர் சரவணன், மண்டல தலைவர்கள் கனகராஜ், அன்பரசன், ராஜா, சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.