அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் நாய்கள் தொல்லை அதிகரிப்பு; டாக்டர்கள், நர்சுகள் அவதி
கரூர்:கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், நாய்கள் அதிகளவில் உலா வருகிறது. இதனால், டாக்டர்கள், நர்சுகள், நோயாளிகள், துாய்மை பணியாளர்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.கரூர் அருகே, காந்தி கிராமம் கொளந்தானுார் பகுதியில், நகராட்சிக்கு சொந்தமான இடத்தில், 295.14 கோடி ரூபாய் செலவில் புதிதாக, மருத்துவ கல்லுாரி மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. அதையடுத்து, கரூர் நகரில் இயங்கி வந்த மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, புதிய கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது. தற்போது, புதிய மருத்துவ கல்லுாரியில், 500 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். மேலும், டாக்டர்கள், நர்சுகள் மற்றும் துாய்மை பணியாளர்கள், 250 பேருக்கு மேல் பணியில் உள்ளனர்.இந்நிலையில், மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், சவக்கிடங்குக்கு எதிரில் வாகனங் களை நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், அதிக எண்ணிக்கையில் நாய்கள் உலா வருகின்றன. இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் பணிகளை முடித்து, வீடு திரும்பும் டாக்டர்கள், நர்சுகள், பணியாளர் வாகனங்களை எடுக்க விடாமல், நாய்கள் துரத்துகின்றன. அதில், பலர் கீழே விழுந்து காயம் அடைந்துள்ளனர். பலரும் தினமும் அவதிக்குள்ளாகின்றனர்.மேலும், மருத்துவகல்லுாரி மருத்துவமனை மற்றும் சாலைகளில், 50 க்கும் மேற்பட்ட நாய்கள் உலா வருவதால் நோயாளிகள், அவர்களது உறவினர்களும் நாய்க்கடி பீதியில் உள்ளனர். எனவே, கரூர் மருத்துவ கல்லுாரி மருத்துவ மனையில் சுற்றி திரியும், நாய்களை பிடித்து, வேறு இடத்தில் கொண்டு போய் விட, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.