நகை, பணம் கேட்டு மனைவி;மாமியாரை தாக்கியவர் கைது
குளித்தலை:குளித்தலை அடுத்த லாலாப்பேட்டையை சேர்ந்தவர் சத்தியபிரியா, 30; இவர், திருச்சி மாவட்டம், தாராநல்லுாரை சேர்ந்த மாரியப்பன், 46, என்பவரை, கடந்த, 2010ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, 12 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில், கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடால், 2024ல் விவாகரத்து பெற்றனர். சத்தியபிரியா, மகனை தன் தாய் வீட்டில் வைத்து பராமரித்து வந்தார். மாரியப்பன் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். கடந்த, 18ல் லாலாப்பேட்டையில் வசித்து வரும் முதல் மனைவியான சத்தியபிரியா வீட்டிற்கு சென்ற மாரியப்பன், தன் தங்கை நகைகளை கேட்டு சண்டையிட்டுள்ளார். அப்போது, சத்தியபிரியா, மாமியார் நாச்சியம்மாள், மாமனார் மணி ஆகியோரை பெல்டால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த நாச்சியம்மாள், குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இதுகுறித்து சத்தியபிரியா கொடுத்த புகார்படி, லாலாப்பேட்டை போலீசார் மாரியப்பனை கைது செய்தனர்.